Centuries in WC Final: கிளைவ் லாயிட்ஸ், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைவாரா ரோகித் சர்மா? பொன்னான வாய்ப்பு!
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை கேப்டன்களாக கிளைவ் லாயிட்ஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் மட்டுமே சதம் அடித்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுடன் கோப்பைக்கான மோதலில் இந்தியா களமிறங்குகிறது.
இறுதிப் போட்டி சதங்கள்:
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை முத்தமிடுமா? என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். கோப்பையை கைப்பற்றுவதற்காக இரு அணி வீரர்களும் அகமதாபாத் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை 6 வீரர்கள் மட்டுமே சதம் அடித்திருந்தாலும், அவர்களில் கேப்டனாக இருந்து சதம் அடித்தது கிளைவ் லாயிட்ஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் மட்டுமே ஆகும். இவர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இணைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேட்டிங்கில் மிரட்டும் ரோகித்:
ஏனெ்னறால், இந்த தொடர் தொடங்கிய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் டக் அவுட்டான பிறகு, அதற்கடுத்த ஆடிய அத்தனை போட்டிகளிலும் ரோகித் சர்மா சரவெடியாய் வெடித்தார். தொடக்க வீரராக களம் புகுந்தவுடன் பின்னால் வரும் வீரர்கள் நெருக்கடி இல்லாமல் ஆடுவதற்காக அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்குகிறார்.
உண்மையில் ரோகித் சர்மா 20 ஓவர்களுக்கு மேல் நின்றாலே இந்திய அணி 400 ரன்களை எளிதாக கடந்துவிடும் என்றே சொல்லலாம். அதுவும் சிக்ஸர்களை சரமாரியாக விளாசுவதால் எதிரணி பந்துவீச்சாளர்கள் திக்குமுக்காடிப் போகின்றனர் என்றே சொல்ல வேண்டும். மிக அபாரமான திறமைசாலியான ரோகித் சர்மா சதத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பு:
இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த பிறகு அரைசதம், அதிரடி பேட்டிங் என காட்டிக் கொண்டிருக்கும் ரோகித் சர்மா சதம் அதன்பின் அடிக்கவில்லை. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 1975ம் ஆண்டு கிளைவ் லாயிட் 102 ரன்களும், 2003ம் ஆண்டு ரிக்கி பாண்டிங் 140 ரன்களும் அடித்தது மட்டுமே இறுதிப் போட்டியில் ஒரு கேப்டனாக அடிக்கப்பட்ட சதங்கள் ஆகும்.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு அப்படி ஒரு பொன்னான வாய்ப்பு ரோகித் சர்மாவிற்கு கிட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 44 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரோகித்சர்மா 8 சதங்கள், 9 அரைசதங்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக அவருடைய இரட்டை சதமான 209 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மட்டும் 2 ஆயிரத்து 332 ரன்களை எடுத்துள்ளார்.
கிளைவ் லாயிட்ஸ், ரிக்கி பாண்டிங்:
இதனால், உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அபாரமான பேட்டிங்கை ரோகித் சர்மா வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பின்வரிசை வீரராக வருவதால் அவருக்கான சத வாய்ப்பு மிக மிக குறைவு ஆகும். ஆனால், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு சத வாய்ப்பு அதிகளவு இருப்பதால் கிளைவ் லாயிட்ஸ், ரிக்கி பாண்டிங் எனும் ஜாம்பவான் வரிசையில் ஜாம்பவான் ரோகித் இணைவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.