IND vs AUS; மன வலிமை, பொறுமை! டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையை மறக்கிறதா இந்தியா?
பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படை சாராம்சத்தை மறந்து கொண்டிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இன்று கிரிக்கெட் என்றால் டி20 கிரிக்கெட்டே வளரும் தலைமுறையினருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஆனால், நீண்ட கால கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஒரு உண்மையான கிரிக்கெட் வீரனுக்கு தக்க சவாலாக அமைவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றே கூறுவார்கள்.
மன வலிமைக்கும், பொறுமைக்கும் சவால்:
டெஸ்ட் கிரிக்கெட்டைப் போல வேற எந்தவொரு விளையாட்டிலும் வீரர்களின் மன வலிமைக்கும், பொறுமைக்கும் சவால் அளிக்கும் விளையாட்டு கிடையவே கிடையாது. இதன் காரணமாகவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் வந்தும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான மோகம் மட்டும் இன்று வரை குறையவே இல்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி ஆட வேண்டும் என்று உலகின் பல நாடுகளுக்கு பாடம் எடுக்கும் வகையில் வீரர்களை உருவாக்கியது இந்தியா. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், புஜாரா, ரஹானே என இந்த வீரர்கள் களத்தில் நாள் முழுவதும் நின்று ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளனர். குறிப்பாக, டிராவிட், லட்சுமணன், புஜாரா போன்ற வீரர்கள் களத்தில் நின்று எதிரணியினரை வார்த்தைகளால் இல்லாமல் பேட்டால் வெறுப்பு ஏற்றுவதில் கில்லாடிகள். அதாவது, தங்களை அவுட்டாக்கவிடாமல் எதிரணியின் பந்துவீச்சாளர்களின் மனநிலையை உடைப்பதில் வல்லவர்கள்.
அரிதாக மாறிப்போன பொறுமை:
டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையே பேட்ஸ்மேன்களின் மன வலிமைக்கும், பந்துவீச்சாளர்களின் மன வலிமைக்கும் நடக்கும் யுத்தமே ஆகும். அதில் இந்திய அணி எப்போதும் தலைசிறந்த அணியாகவே திகழ்ந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்தியா அந்த அடிப்படையை மறக்கிறதோ என்ற கேள்வி ஆழமாக எழுகிறது. 2001ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கொல்கத்தா மண்ணில் ஆடும்போது ஃபாலோ ஆன் ஆன பிறகு லட்சுமணன் - ராகுல் டிராவிட் பார்டனர்ஷிப்பில் 303 ரன்களை 5வது விக்கெட்டிற்கு குவித்து இந்தியாவையும் வெற்றி பெற வைத்தனர். அதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மனவலிமைக்கு கிடைத்த வெற்றி. ஆகச்சிறந்த உதாரணம். இதேபான்று, லாரா மற்றும் சந்தர்பாலும் தங்களது அணிக்காக தனி ஆளாக போராடி வெற்றியைத் தேடித்தந்துள்ளனர்.
ஆனால், தற்போதைய இந்திய அணியில் களத்தில் நங்கூரமிட்டு நிற்க வேண்டும் என்ற மனநிலை என்பதை காண்பதே அரிதாக உள்ளது. அதற்கு ஒருவேளை டி20 போட்டிகள் மீதான வீரர்களின் மோகமே காரணமோ என்றும் நம்மை எண்ண வைக்கிறது. ஏனென்றால், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், நிதிஷ் ரெட்டி ஆகியோர் எல்லாம் ஐபிஎல் தொடரில் பட்டாசாய் கொளுத்துபவர்கள்.
வித்தியாசமான அணுகுமுறை:
வெள்ளை நிற பந்திற்கும், சிவப்பு நிற பந்திற்கும் இடையேயான வித்தியாசமான அணுகுமுறையே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியை தங்கள் வசப்படுத்தும். சிவப்பு நிற பந்தில் ஆடுவது மிகவும் சவாலானது ஆகும். போட்டியை மிக எளிதாக டிரா செய்ய வேண்டிய சூழலில் ஆட்டத்தையே ஆஸ்திரேலியாவிடம் தாரை வார்த்ததும், அனுபவமிக்க ரோகித், விராட் கோலியே இந்த தவறைச் செய்ததும்தான் ரசிகர்களின் ஆதங்கத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.
பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுக்கும் விதமும் அவர்கள் டி20 வடிவத்தில் இருந்து வெளியே வரவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது எப்படி? ரசிகர்களின் கேலியை காதில் வாங்காமல் ஆடுவது எப்படி? எதிரணியின் ஸ்லெட்ஜிங்கையும் தாண்டி மன வலிமையுடன் ஆடுவது எப்படி? மன வலிமையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்று வீரர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். இதை வீரர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு கவுதம் கம்பீருக்குத்தான் உள்ளது.
லட்சுமணன், புஜாரா, ரஹானே, ஹனுமன் விஹாரி போன்று களத்தில் நீண்ட நேரம் எப்படி பேட்டிங் செய்வது போன்ற டெஸ்ட் போட்டிக்கான அணுகுமுறையையும் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டிக்கான அடிப்படை சாராம்சமான மனவலிமையையும், பொறுமையையும் வளர்த்துக் கொள்ளாவிட்டால் இந்திய அணி தோல்வியைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.