ஆஸி. தொடருக்குப் பின் இவர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை..! இந்த 3 பேர் ஓய்வு பெற வாய்ப்பா..?
தொடருக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெறக்கூடிய சில வீரர்கள் உள்ளனர். IND vs AUS 4வது டெஸ்டுக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெறக்கூடிய 3 இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போது நடைபெற்று வரும் IND vs AUS டெஸ்ட் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 9 (வியாழன்) அன்று தொடங்க உள்ளது. தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை இந்தியா அற்புதமாக துவங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி 3வது டெஸ்டில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆனது ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023க்கு முன்னதாக இந்திய அணிக்கான கடைசி தொடராகும். தொடருக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் சில வீரர்கள் உள்ளனர். IND vs AUS 4வது டெஸ்டுக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ள இந்த 3 இந்திய வீரர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கே.எல்.ராகுல்
இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் வீரர் ஆவார். வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 1வது மற்றும் 2வது டெஸ்டில் சொதப்பிய நிலையில், ஆடும் லெவன் அணியில் இருந்தும், துணை கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். நீண்ட காலமாக டெஸ்டில் அவரது மோசமான செயல்திறன் குறித்து, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில், அவருக்கு பதிலாக விளையாட காத்திருக்கும் வீரர்களை களமிறங்க சொல்லி வலியுறுத்தி வந்தனர். 2022-23 சீசனில், ராகுல் 7 இன்னிங்ஸ்களில் 13.57 சராசரியில் 95 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது டாப் ஸ்கோர் வெறும் 23 தான். ஷுப்மான் கில்லின் அற்புதமான ஃபார்ம் மூலம், ராகுல் விரைவில் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ஒரு தொடக்க வீரராக இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று தெரிகிறது. மேலும், அவருக்கு விக்கெட் கீப்பிங்கிலும் பெரியளவில் செயல் திறன் இல்லாததால் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட மாட்டார். எனவே, IND vs AUS 4வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கண்டிப்பாக விலக்கி வைக்கப்படுவார், ஓய்வு பெறுவது அவரது விருப்பம் ஆகலாம்.
ஜெய்தேவ் உனத்கட்
IND vs AUS 4வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெறக்கூடிய மற்றொரு வீரர் ஜெய்தேவ் உனத்கட். இடது கை வேகப்பந்து வீச்சாளர் கடந்த ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பினார். இருப்பினும், தொடரின் போது ஒரு டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே பெற முடிந்தது. அவர் IND vs AUS டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக இருக்கிறார், ஆனால் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முந்தைய டெஸ்டில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவர் 4வது டெஸ்டில் விளையாடி தனது இடத்தை மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா தகுதி பெற்றால் உனட்கட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எனவே, உனத்கட் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் ஓய்வு பற்றி யோசிக்க வாய்ப்புண்டு.
முகமது ஷமி
இந்த பட்டியலில் உள்ள மற்றொரு வீரர் முகமது ஷமி. ஷமி தற்போது இந்தியாவுக்கு முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இருப்பினும், சமீப காலமாக டெஸ்டில் அவரது செயல்திறன் ஏற்புடையதாக இல்லை. 2023ல் இதுவரை 2 ஆட்டங்களில் 14.42 என்ற சராசரியில் 7 விக்கெட்டுகளை மட்டுமே ஷமி வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டும் ஷமி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்சில் 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். 3வது டெஸ்டில் ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் தான் இடம்பிடித்தார். ஷமிக்கு 33 வயதாகும் நிலையில், பல இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், அவர்கள் விரைவில் டெஸ்ட் அணியில் ஷமியின் இடத்தைப் பிடிக்கலாம். எனவே, IND vs AUS 4வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஷமி ஓய்வு பெறுவது குறித்து ஆலோசிக்கலாம்.