Smriti Mandhana: அதிரடியில் சரவெடி காட்டிய ஸ்மிருதி மந்தனா.. ஒரே போட்டியில் குவிந்த பல சாதனைகள்..!
சர்வதேச டி20 போட்டியில் மந்தனாவின் சிறந்த இன்னிங்ஸ் இதுவாகும். இந்த ஸ்கோர் அடித்தும் ஸ்மிருதி மந்தனா ஒரு தேவையற்ற சாதனை ஒன்றை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நேற்று நடந்த அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 போட்டியில் மந்தனாவின் சிறந்த இன்னிங்ஸ் இதுவாகும். இந்த ஸ்கோர் அடித்தும் ஸ்மிருதி மந்தனா ஒரு தேவையற்ற சாதனை ஒன்றை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.
மந்தனா நேற்றைய போட்டியில் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்தார். வெறும் 13 ரன்களில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை தவறவிட்டார். இதன்மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஸ்கோரில் ஆட்டமிழந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் 87 என்பது துரதிர்ஷ்டவசமான எண்ணாக பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கோரில் அவுட்டான முதல் வீராங்கனை என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார்.
முக்கிய சாதனைகளை படைத்த மந்தனா:
ஸ்மிருதி மந்தனா தனது இன்னிங்ஸின் போது பல சாதனைகளை படைத்தார். தென்னாப்பிரிக்காவில் மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை மந்தனா முறியடித்துள்ளார். மிதாலி ராஜ் கடந்த 2018 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு அதிகபட்ச இந்திய வீராங்கனையின் ஸ்கோராக இருந்தது.
மகளிர் டி20 போட்டிகளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் அதிகபட்ச ஸ்கோர்
87 - ஸ்மிருதி மந்தனா v IRE, இன்று
86 - ஸ்மிருதி மந்தனா v NZ, 2019
83 - ஸ்மிருதி மந்தனா v AUS, 2018
79* - ஸ்மிருதி மந்தனா v ENG, 2022
79 - ஸ்மிருதி மந்தனா v AUS, 2022
முதல் 5 இடங்களிலும் ஸ்மிருதி மந்தனாவே முதலிடத்தில் உள்ளார்.
அதிக அரைசதம்:
அயர்லாந்துக்கு எதிராக ஸ்மிருதி மந்தனா தனது டி20 சர்வதேச வாழ்க்கையில் 22வது அரைசதத்தை அடித்தார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த இந்தியாவின் முதல் பெண் பேட்ஸ்மேன் மற்றும் உலகின் இரண்டாவது பெண் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 26 சதங்களுடன் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி பேட்டிங்:
செயிண்ட் ஜாட்ஜ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 62 ரன்களை சேர்த்தபோது, 24 ரன்கள் எடுத்து இருந்த ஷஃபாலி வர்ம தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுமுனையில் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆட, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் அவருக்கு உறுதுணையாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்மிருதி மந்தனா அரைசதம்:
அயர்லாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஸ்மிருதி மந்தனா, 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். சர்வதேச டி-20 போட்டிகளில் அவர் அடிக்கும் 22வது அரைசதம் இதுவாகும். மறுமுனையில் ஹர்மன் பிரீத் கவுர் 13 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனாலும், ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 87 ரன்களை குவித்து அவுட்டானார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லந்து அணி, மழை குறுக்கிட்ட நிலையில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.