(Source: ECI/ABP News/ABP Majha)
ICC T20 Rankings: டி20-இன் 'கிங்' சூர்யகுமார் யாதவ்.. தரவரிசையில் அபார முன்னேற்றம் அடைந்த ரிங்கு சிங்..!
உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்யப்பட்டார்.
ஐசிசி சமீபத்தில் சமீபத்திய டி20 தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவின் புள்ளிகள் சிறப்பாகவே உள்ளது. சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அபாரமாக விளையாடி 36 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்கள் அடித்தார். இது தரவரிசை பட்டியலில் இன்னும் அவருக்கு அதிக புள்ளிகளை பெற்றுதந்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் கேப்டனாக இருந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன்மூலம், தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 865 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 787 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்திய வீரர்களை பொறுத்தவரை டி20 தரவரிசை பட்டியலில், ருதுராஜ் கெய்க்வாட் 681 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29வது இடத்தில் உள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா 10 இடங்கள் முன்னேறி 55 வது இடத்திற்கு வந்துள்ளார்.
ரிங்கு சிங் அபார முன்னேற்றம்:
செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ரிங்கு 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68* ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸின் போது, ரிங்குவின் ஸ்ட்ரைக் ரேட் 174.36 ஆக இருந்தது. இதன்மூலம், டி20 தரவரிசையில் ரிங்கு 59வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, சர்வதேச டி20 தரவரிசையில் ரிங்குவின் தரவரிசை 464 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிங்குவின் சர்வதேச வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 38 ரன்களும், பின்னர் அடுத்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 37* ரன்கள் எடுத்தார். அதேபோல ரிங்குவுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரிங்கு சிங் 2018 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகம் ஆனாலும், கடந்த ஆண்டு அதாவது ஐபிஎல் 2023ல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். 2023 ஐபிஎல்லில், ரிங்கு 14 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 59.25 சராசரி மற்றும் 4 அரை சதங்கள் அடங்கிய ஸ்டிரைக் ரேட் 149.53 இல் 474 ரன்கள் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எப்படி..?
ரிங்கு இதுவரை இந்திய அணிக்காக டி 20 வடிவத்தில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் தற்போது இவர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளார். ரிங்கு சிங்குவின் குறுகிய சர்வதேச வாழ்க்கையில் இதுவரை, அவர் 11 டி20 போட்டிகளில் விளையாடி அதில், 7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 82.66 சராசரி மற்றும் 183.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 248 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 68* ரன்கள்.
டி20 அணி தரவரிசை:
ஐசிசி டி20 தரவரிசையில், இந்திய அணி 17543 புள்ளிகளுடன் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் உள்ளது. அடுத்ததாக, இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா ஆறாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 7வது இடத்திலும், இலங்கை 8வது இடத்தில் உள்ளது.