NZ vs AUS, Final Match Highlights: தொடரும் நியூசி., சோகம் ; முதல் டி-20 உலகக்கோப்பையை வென்று ஆஸி., அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி-20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடந்து முடிந்துள்ளது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி-20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
துபாயில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு டி-20 உலகக்கோப்பை போட்டிகளின் வெற்றி, தோல்வியில் டாஸ் மிக முக்கியமான பங்காற்றுவதால், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிமாக இருந்தது. டாஸ் ஜெயித்த அணி போட்டியை வெல்ல அதிக வாய்ப்புகள் என கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்ய இருக்கும் நியூசிலாந்து அதிக இலக்கை செட் செய்து டிஃபெண்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இறங்கியது.
முதலில் பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, மார்டின் குப்தில், டேரில் மிட்சல் ஓப்பனிங் இறங்கினர். ஆனால், அரை இறுதிப்போட்டியில் நாயகனாக மின்னிய மிட்சல் இன்று ஹேசல்வுட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் ஆளாய் அவுட்டாகி வெளியேறினார். இதனால், 4வது ஓவரிலேயே கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் களமிறங்க நேரிட்டது. மற்றொரு ஓப்பனரான குப்தில் (28) பெரிதாக சோபிக்காத நிலையில், வில்லியம்சன் மட்டும் சிறப்பாக ஆடினார். 3 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் என 48 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கேப்டன் பொறுப்பை கச்சிதமாக நிறைவேற்றினார் வில்லியம்சன்.
Kane Williamson. Pure class.#NZvAUS | #T20WorldCup | #T20WorldCupFinal pic.twitter.com/1GQduCT5Zf
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 14, 2021
ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, ஜம்பா ஒரு விக்கெட்டும், ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குறிப்பாக, 18வது ஓவரின்போது க்ளென் ஃபிலிப்ஸ், வில்லியம்சன் என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.
கடினமான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு, வார்னரும், ஃபின்ச்சும் ஓப்பனிங் களமிறங்கினர். இம்முறையும் கேப்டன் ஃபின்ச், ஸ்விங் பந்தை எதிர்கொள்ள முடியாமல் 5 ரன்களுக்கு வெளியேறினார். அதிரடி ஃபார்மில் இருந்த வார்னர், தொடர்ந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரன் சேர்த்தார். 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் என 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஒரு தொடக்க புள்ளியாக அமைந்தார்.
Australia in T20 World Cup:
— India_AllSports (@India_AllSports) November 14, 2021
2007: Lost in Semis.
2009: Didn't qualify for Semis.
2010: Lost in Final.
2012: Lost in Semis.
2014: Didn't qualify for Semis.
2016: Didn't qualify for Semis.
2021: Champions
Congrats @cricketcomau on your maiden #T20WorldCup title.
13வது ஓவரில் வார்னர் அவுட்டானதை தொடர்ந்து, மேக்ஸ்வெல் களமிறங்கினர். ஏற்கனவே அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்த மார்ஷுடன் இணைந்து வேகமாக இலக்கை சேஸ் செய்தனர். மார்ஷ் 77 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்