ஸ்கையில் சூர்யகுமார் யாதவ்… அதிரடி பேட்டிங்கிற்கு முதல் இடம்! ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்!
அவர் 37 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட 1179 ரன்களை குவித்துள்ளார். 40.65 சராசரியுடன், 177.02 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 863 புள்ளிகளுடன் ஐசிசி டி20ஐ தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் முதலிடம்
சூர்யகுமார் யாதவ் 2021 இல் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஐ தொடரில் அறிமுகமானார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டி20 சதத்தை அடித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் தனது முத்திரையைப் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். இந்த அதிரடி ஆட்டங்களின் வெளிப்பாடு காரணமாக தற்போது உலக டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் சூர்யகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமார் யாதவின் பரபரப்பாக ரன் குவிக்கும் திறன் மூலம் தொடர்ந்து அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி 863 புள்ளிகளைப் பெற்று இந்த இடத்தை அடைந்துள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டிக்கு முன், அவர் 37 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட 1179 ரன்களை குவித்துள்ளார். 40.65 சராசரியுடன், 177.02 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவ் முகமது ரிஸ்வானைக் கடந்ததன் மூலம், இந்த ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றார்.
முகமது ரிஸ்வான்
இதற்கிடையில், ரிஸ்வான் தனது மோசமான ஸ்ட்ரைக் ரேட்டிற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த ஆண்டு, அவர் 123.84 என்ற சாதாரண ஸ்ட்ரைக் ரேட்டில் இதுவரை 888 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார். இதன் விளைவாக, ரிஸ்வான் இப்போது ஐசிசி தரவரிசையில் 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு சரிந்துள்ளார், அதே நேரத்தில் நியூசிலாந்தின் டெவோன் கான்வே 792 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கிளென் பிலிப்ஸ்
சூர்யகுமார் யாதவ் தவிர, டி20 பேட்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற இந்திய வீரர் விராட் கோலி மட்டும்தான். இதற்கிடையில், நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் டி20 உலகக் கோப்பையின் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 இடங்கள் ஏறி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பிலிப்ஸ் இதுவரை நியூசிலாந்து அணிக்காக ஆஸ்திரேலியாவில் சதம் மற்றும் இரண்டு அரைசதங்களை அடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசை
இலங்கையின் லெக் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 3வது இடத்திற்கு வந்துள்ளார். அவர் இலங்கைக்காக டி20 உலகக் கோப்பையில் இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதற்கிடையில், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதஸ்லிடத்தில் இருந்து வருகிறார். இந்தியாவின் ஹர்திக் பாண்டியா தனது 3-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
ICC T20I பேட்டிங் தரவரிசை (நவம்பர் 2, 2022 நிலவரப்படி)
- சூர்யகுமார் யாதவ் - 863 புள்ளிகள்
- முகமது ரிஸ்வான் - 842 புள்ளிகள்
- டெவோன் கான்வே - 792 புள்ளிகள்
- பாபர் ஆசம் - 780 புள்ளிகள்
- ஐடன் மார்க்ரம் - 767 புள்ளிகள்
- டேவிட் மாலன் - 743 புள்ளிகள்
- க்ளென் பிலிப்ஸ் - 703 புள்ளிகள்
- ரெய்லி ரூஸோ- 689 புள்ளிகள்
- ஆரோன் பின்ச் - 687 புள்ளிகள்
- விராட் கோலி - 638 புள்ளிகள்