SA Vs NED Innings Highlights: சரிந்து கிடந்த நெதர்லாந்தை தூக்கி நிறுத்திய கேப்டன் எட்வர்ட்ஸ்.. தென்னாப்பிரிக்காவுக்கு 246 ரன்கள் இலக்கு!
SA Vs NED கனமழை காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கிய இந்த தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.
மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்
இந்நிலையில், இந்த தொடரின் 15வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் மோதிக் கொண்டன. இந்த போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த போட்டி திட்டமிடப்பட்ட நேரத்தில் கனமழை காரணமாக தொடங்கப்படவில்லை. மழை நின்ற பின்னர் இந்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டதால், பவர்ப்ளேவும் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பவர்ப்ளேவில் நெதர்லாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 28 ரன்கள்தான் சேர்த்தது. பவர்ப்ளேவிற்குப் பின்னர், இந்த போட்டி முழுவதுமாக தென்னாப்பிரிக்கா அணியின் கட்டுக்குள் வந்தது. 50 ரன்களை எட்டுவதற்குள் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய எட்வர்ட்ஸ்
இந்த நிலைமையைப் பார்த்தபோது நெதர்லாந்து அணி சவாலான இலக்கினை தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்காது என்பது தெளிவானது. நெதர்லாந்து அணி சார்பில் சிறப்பான பார்ட்னர்ஷிப் என்பதே அமையவில்லை. அவ்வப்போது நெதர்லாந்து அணி சார்பில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விரட்டப்பட்டதால், நெதர்லாந்து அணி 100 ரன்களைக் கடந்தது.
100 ரன்களைக் கடந்த நெதர்லாந்து அணி அதன் பின்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 150 ரன்கள் எடுப்பதே சிரமம் என கருதப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இணைந்த கேப்டன் எட்வர்ட்ஸ் மற்றும் மெர்வி கூட்டணி அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றது.
இதில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தினால் 53 பந்துகளில் பொறுப்பான அரைசதத்தினை விளாசினார். சிறப்பாக விளையாடிய எட்வர்ட்ஸ் மற்றும் மெர்வி கூட்டணி 37 பந்துகளில் அதிரடியாக 64 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட்டினை இழந்து 245 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 69 பந்தில் 78 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, ரபாடா மற்றும் ஜான்சென் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.