World Cup 2023: சென்னையில் விளையாட விருப்பம் தெரிவித்ததா பாகிஸ்தான்..? நெருங்கும் உலகக்கோப்பை.. முடிவு என்ன?
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சென்னை மற்றும் கொல்கத்தா மைதானங்களில் மட்டும் விளையாட விரும்புவதாக பல்வேறு ஊடகங்களில் கூறப்பட்டது.
ஆசிய கோப்பை 2023 தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு நடத்துகிறது. இருப்பினும், இந்த தொடர் பாகிஸ்தானில் நடந்தால் இந்திய அணி விளையாடாது, அதற்கு பதிலாக வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் விளையாடாது என்று கூறப்பட்டு வந்தது. அப்படி விளையாடியே ஆக வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டால் இந்தியாவில் பாகிஸ்தான் அணி விரும்பும் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என்று செய்திகள் வந்தன. ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சென்னை மற்றும் கொல்கத்தா மைதானங்களில் மட்டும் விளையாட விரும்புவதாக பல்வேறு ஊடகங்களில் கூறப்பட்டது. இதுகுறித்து ஐசிசிக்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளியிட்ட தகவலில், “ பாகிஸ்தான் அணி சென்னை மற்றும் கொல்கத்தாவில் விளையாட விருப்பம் தெரிவித்ததாக நாங்களும் கேள்வி பட்டோம். இது தொடர்பாக பிசிபியிடம் இருந்து ஐசிசி எந்த கோரிக்கையையும் பெறவில்லை. அதே நேரத்தில், உலகக் கோப்பை நடைபெறும் இடம் குறித்து ஐசிசியுடன் எந்தப் பேச்சும் இல்லை என்று பிசிபியின் செய்தித் தொடர்பாளரும் தெளிவுபடுத்தியுள்ளார். இது வதந்தியாக கூட இருக்கலாம் “ என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் டெல்லியிலா..?
ஒரு நாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியின் முழு அட்டவணை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளிவரும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி தனது அனைத்து குரூப் ஸ்டேஜ் போட்டிகளையும் டெல்லியிலேயே விளையாடலாம் என தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் விருந்தினர்கள் தங்க வைக்க ஏதுவாக இருக்கும் என்றும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடந்த உலகக்கோப்பை தொடரின்போது டெல்லியில் தங்கியிருந்தது. வாகா எல்லைக்கு அருகாமையில் இருப்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் போட்டியைக் காண வசதியாக இருக்கும்.
உலகக்கோப்பை நடைபெறும் இடங்கள்..?
இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக இந்தியாவில் உள்ள 12 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, தர்மஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்கள் உள்ளிட்ட 12 மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.