Gautam Gambhir: நானெல்லாம் கிரிக்கெட் விளையாடவே வந்திருக்க கூடாது - உலகக்கோப்பை நாயகன் கம்பீர் ஓபன் டாக்
Gautam Gambhir: குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் கம்பீரின் பேட்டிங் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் நினைவு கூறப்படும்.
இந்திய கிரிக்கெட்டில் கவுதம் கம்பீரின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது அணியில் முக்கியமான வீரராக இருந்தார். குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் அவரது பேட்டிங் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் நினைவு கூறப்படும். அதேபோல், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இரண்டு முறை கோப்பையை வென்று அசத்தினார்.
இப்படியான புகழுக்குச் சொந்தக்காரரான கம்பீர், சமீபத்திய நேர்காணலில் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வருத்தம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் கிரிக்கெட் வீரராக இருந்திருக்கக் கூடாது என அதிர்ச்சியான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
படா பாரத் டாக் ஷோ சீசன் 2 நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பேசும்போது, "நான் கிரிக்கெட் வீரராக இருந்திருக்கக் கூடாது" என்று கூறினார். இது ரேபிட் ஃபயர் பிரிவின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலாகும். மேலும் கம்பீர் தனது பதிலுக்கான காரணத்தை விளக்கவில்லை. இது தற்போது ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அதேபோல், இதற்கு முன்னதாக, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரின் 5வது லீக் போட்டி இந்தியா மற்றும் நேபாளம் இடையே கண்டி பல்லேகெலே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வெர்த் - லூயிஸ் விதிப்படி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றிருந்த கம்பீரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் போது, கம்பீர் மைதானத்திற்குள் சென்று கொண்டிருந்த போது, ரசிகர்கள் கோலி-கோலி என கோஷங்களை எழுப்பினர். இதற்கு கோபமாக பதிலளித்த கம்பீர், நடுவிரலை காட்டினார். இது இணையத்தில் வைரலானது.
2013 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் தொடங்கிய சண்டையால் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையேயான உறவு மோசமடைந்தது. இதற்குப் பிறகு, ஐபிஎல் 16வது சீசனிலும், ஐபிஎல் போட்டியின்போது கம்பீர் - கோலி இடையே களத்தில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த போட்டியில் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடி கொண்டிருந்த போது, லக்னோ அணிக்கு கம்பீர் வழிகாட்டியாக இருந்து வந்தார். ஆப்கானிஸ்தான் வீரர் நவீன், லக்னோ அணிக்காக விளையாடியபோது கோலிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது. அந்த போட்டி முடிந்தபிறகு லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் நவீனை அழைத்து கோலியிடம் பேச சொன்னார். அப்போது, அவர் மதிக்காமல் சென்று விட்டார். அப்போது, கோலி இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேயர்ஸிடம் பேசிகொண்டு இருந்தார். அந்தநேரத்தில் அங்கே வந்த கம்பீர் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.