WTC கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது, ஆனால்…-, ரோகித் ஷர்மாவை எச்சரித்த சச்சின் டெண்டுல்கர்!
"டெஸ்ட் கிரிக்கெட்டில், அடுத்த ஐந்து நாட்களுக்கான நிலைமைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதற்கேற்ப அணியை தேர்வு செய்ய வேண்டும்," என்று அவர் இந்தியா டுடே கான்கிளேவில் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அகமதாபாத்தில் நடந்த தொடரின் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இருந்தபோதிலும், இந்த போட்டி முடியும் முன்னரே இறுதிப்போட்டி ரேஸில் இருந்த ஒரே அணியான இலங்கை அணி நியூசிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. அதனால இந்திய அணி போட்டியின் முடிவுக்கு முன்னரே தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுடனான கடைசி போட்டியும் நீண்டுகொண்டே போனதால் டராவில் முடிந்தது. அதே தொடரில் மூன்றாவது போட்டியான இந்தூர் டெஸ்டில் இந்தியாவை தோற்கடித்த போதே ஆஸ்திரேலியா ஏற்கனவே WTC இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் தி ஓவல் மைதானத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்திய அணி லெவன் குறித்த விவாதம்
இரு அணிகளும் மீண்டும் மோதி கோப்பையை வெல்ல தயாராகிவிட்ட நிலையில், இப்போட்டிக்கான இந்தியாவின் சாத்தியமான அணி குறித்த ஊகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஏனெனில் இந்த தொடரை வைத்து மட்டுமே அந்த போட்டியின் லெவனை தீர்மானிக்க முடியாது. இந்திய மைதானங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால் அதே பந்துவீச்சு தாக்குதலை கொண்டு செல்ல முடியாது. அதற்கேற்ப வீரர்களை முடிவு செய்யும் வேலையை பலர் செய்து வரும் வேளையில், ஒரு நிகழ்வின் போது, புகழ்பெற்ற முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரிடமும் இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்டது, மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியின் வெற்றியில் நம்பிக்கையுடன் இருந்தபோதும், ரோஹித் ஷர்மாவை எச்சரித்தார்.
டெண்டுல்கர் எச்சரிக்கை
ஓவல் மைதானத்தில் ஒரு சமநிலையான குழுவைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை டெண்டுல்கர் எடுத்துரைத்தார், மேல்நிலை நிலைமைகள் மட்டுமல்ல, ஐந்து நாட்கள் முழுவதும் வானிலை முன்னறிவிப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். "டெஸ்ட் கிரிக்கெட்டில், அடுத்த ஐந்து நாட்களுக்கான நிலைமைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதற்கேற்ப அணியை தேர்வு செய்ய வேண்டும்," என்று அவர் இந்தியா டுடே கான்கிளேவில் கூறினார். "நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம், எங்களிடம் ஒரு நல்ல அணி, சமநிலையான அணி உள்ளது", என்று கூறிய அவர், ஆனாலும் இந்திய அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமநிலை கொண்ட அணி வேண்டும்
“ஒரு கேப்டனுக்கு சமநிலையை சரியாகப் பெற அணியில் கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது சற்று சவாலானதாக இருக்கும். நான் இந்தியாவின் பார்வையில் இருந்து தான் யோசிக்கிறேன், ஆஸ்திரேலியர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்யட்டும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சரித்திரம் படைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி இருக்கும்; இந்த தொடரின் தொடக்கப் பதிப்பில் சவுத்தாம்ப்டனில் நியூசிலாந்திடம் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இரண்டாவது முறையாக தகுதி பெற்று தனது ஆளுமையை பதிவு செய்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நிலைமைகளில் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் நட்சத்திர பந்துவீச்சு தாக்குதலைக் கொண்டிருப்பதால், அவர்களிடம் பந்துவீச்சில் எந்தத் தள்ளாட்டமும் இருக்காது, எனவே இந்திய அணிதான் அதிக எச்சரிக்கையுடன் ஆடும் லெவனை தேர்வு செய்யவேண்டும் என்று கூறுகின்றார்.