Ind vs Aus 2nd ODI: ஒருநாள் தொடரையும் வெல்லுமா ரோகித் படை..? வெற்றியை தொடங்குமா ஆஸ்திரேலியா..? இன்று 2வது மோதல்..!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திராவில் இன்று நடைபெற உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணியளவில் தொடங்க இருக்கிறது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. அதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 75 ரன்களுடனும் ஜடேஜா 45 ரன்களுடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறச்செய்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 -0 என முன்னிலை வகிக்கிறது.
2வது ஒருநாள் போட்டி:
இந்நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. தொடரை இழப்பதை தவிர்க்க ஆஸ்திரேலிய அணியும், இன்றைய போட்டியின் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும் தீவிரம் வருகிறது. இதனால் இன்றைய போட்டியும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.
இந்திய அணி நிலவரம்:
தனிப்பட்ட காரணங்களால் முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புவது அணியை மேலும் வலுவடைய செய்துள்ளது. இதனால், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். முதல் போட்டியில் ஏமாற்றிய கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்ட்யா, ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை திணறடித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி நிலவரம்:
ஆஸ்திரேலிய அணியும் அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு நிகரான பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. கடந்த போட்டியில் அந்த அணியின் பேட்டிங் வரிசை சொதப்பியது தோல்விக்கு முக்கிய கரணமாக கருதப்படுகிறது. இதனால் கேப்டன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகியோரை அந்த அணி அதிகம் நம்பியுள்ளது. பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
நேருக்கு நேர்:
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 144 முறை நேருக்கு நேர்மோதியுள்ளன. இதில் 80-ல் ஆஸ்திரேலியாவும், 54-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டத்தில் முடிவில்லை.
இந்திய உத்தேச அணி:
சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா , ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்
ஆஸ்திரேலிய உத்தேச அணி:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுசக்னே, மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ்