டி20 வரலாற்றில் இப்படி ஒரு ரன் சேஸா..? கிளாடியேட்டர்ஸ் சாதனையை 48 மணி நேரத்தில் உடைத்த சுல்தான்ஸ்!
இரு தினம் முன்பு இதே பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் முகமது நவாஸ் தலைமையிலான கெத்தா க்ளாடியேட்டர்ஸ் அணி 241 ரன்களை சேஸ் செய்து உலகின் மிகப்பெரிய டி20 ரன் சேஸ் என்று சாதனை படைத்திருந்தது.
இந்த வருட பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் ஏற்கனவே சில பயங்கரமான ரன் சேஸை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைக் கண்டுள்ளது. ஆனால் ராவல்பிண்டியில் உள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பெஷாவர் சல்மியின் 243 என்ற இலக்கை முல்தான் சுல்தான் அணியினர் துரத்தியது இன்னும் ஒரு படி மேலே சென்று உலக சாதனை புரிந்துள்ளது. ருத்ரதாண்டவம் ஆடிய ரைலீ ரோசோவ் 41 பந்துகளில் சதம் அடித்து பாகிஸ்தானில் வான வேடிக்கை காண்பித்தார். அவரது அதிரடியால் இமாலய ரன்னை எளிதில் துரத்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது முல்தான் சுல்தான். கீரன் பொல்லார்டின் 52 ரன்களும் முல்தான் சுல்தான் அணிக்கு 243 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்த உதவியது.
மிகப்பெரிய ரன் சேஸ்
இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள டி20 போட்டிகளின் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸ் என்று தனித்துவமான சாதனையையும் படைத்துள்ளது அந்த அணி. அதில் சிறப்பு என்னவென்றால் இரு தினம் முன்பு தான் இந்த சாதனை மைல்கல் உயர்த்தி வைக்கப்பட்டது. இரு தினம் முன்பு இதே பாகிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் முகமது நவாஸ் தலைமையிலான கெத்தா க்ளாடியேட்டர்ஸ் அணி 241 ரன்களை சேஸ் செய்து உலகின் மிகப்பெரிய டி20 ரன் சேஸ் என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனை படைக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உடைக்கப்பட்டு முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அதிரடி காட்டிய பெஷாவர் அணி
முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மியின் கேப்டன் பாபர் அசாம் தனது கடைசி ஆட்டத்தில் அணியின் அதிகபட்சமாக 73 ரன்கள் குவிக்க, சக தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் 58 ரன் எடுத்தார். அசாம் 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அயூப் 33 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 58 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களுக்கு பின் வந்து அதிரடி காட்டிய இங்கிலாந்து வீரர் டாம் கோஹ்லர்-காட்மோரும் 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் இமாலய ரன்னை இலக்காக நிர்ணயித்தனர். முல்தான் அணியில் இருந்து மீடியம் பேசர் அப்பாஸ் அப்ரிடி தனது நான்கு ஓவர்களில் 4-39 என்ற கணக்கில் அபாரமாக பந்து வீசினார்.
திருப்பி அடித்த முல்தான் சுல்தான்ஸ்
மிகப்பெரிய ரன்னை இலக்காக கொண்டு களமிறங்கிய முல்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷான் மசூத் (5), மொமம்மது ரிஸ்வான் (7) ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டம் இழக்க. கண்டிப்பாக பெஷாவர் அணி வெல்லும் என்ற எண்ணத்தில் பலர் ஆட்டத்தை காணாமல் கூட போயிருக்கலாம். ஆனால் ரைலி ரோசோவ் மற்றும் பொல்லார்ட் இணைந்து 99 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு குவித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் கட்டி இழுத்தனர். பொல்லார்ட் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் நட்சத்திரமாக ரைலி ரோசோவ் அதிரடி காட்டி 121 ரன்களை, வெறும் 51 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் எடுத்தார். அவர் ஆறாவது மற்றும் விழுந்த கடைசி விக்கெட்டாக 227 ரன்களில் அணி இருந்தபோது 19வது ஓவரில்தான் ஆட்டம் இழந்தார். ஆனால் அணியை அப்போதே கரை சேர்த்துவிட்டுதான் சென்றார். அவர் 41 பந்துகளில் தனது சதத்தை மிக வேகமாக எடுத்தார். பிஎஸ்எல் வரலாற்றில் அதிவேக சதமான தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்தார். 2020ல் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 43 பந்துகளில் இதே சாதனையை அவர் படைத்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், அன்வர் அலி (24*) மற்றும் உசாமா மிர் (11*) ஆகியோரின் கேமியோக்கள் முல்தானை வெற்றிக்கு கொண்டு சென்றது. லாகூர் கிலாண்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்குப் பிறகு பிளேஆஃப்களில் இடம்பிடித்த மூன்றாவது அணியாக சுல்தான் தகுதி பெற்றுள்ளது.