Harmanpreet Kaur Fined: மைதானத்தில் கோபத்தில் கொந்தளித்த ஹர்மன்பிரீத் கவுர்.. 75% அபராதம் விதிக்க முடிவு
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விதிகளை மீறி நடந்துகொண்டதால், இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுருக்கு 75 சதவிகிதம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விதிகளை மீறி நடந்துகொண்டதால், இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுருக்கு 75 சதவிகிதம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமனில் முடிந்த தொடர்:
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. தொடரின் முடிவை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டியில், வங்கதேச அணி நிர்ணயித்த 225 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, 49.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்த போட்டி சமனில் முடிந்தது.
Bangladesh-W captain & her team left the photo session after Indian-W captain Harmanpreet Kaur told them,
— SazzaDul Islam (@iam_sazzad) July 23, 2023
-“Why you are only here? You haven't tied the match. The umpires did it for you. Call them up! We better have photo with them as well.”
BCB to notify BCCI & ICC soon. pic.twitter.com/PnyEQxoYuC
கொந்தளித்த ஹர்மன்பிரீத் கவுர்:
இந்த போட்டியில், 34வது ஓவரின் 4வது பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றபோது பந்து காற்றில் பறக்க, அதனை வங்கதேசத்தின் நஹிதா அக்தர் பிடித்து கேட்ச் முறையில் விக்கெட் கோரினார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், பந்து தனது பேட்டில் படவில்லை என கூறிக்கொண்டு நடுவரை முறைத்த ஹர்மன்பிரீத் தனது பேட்டால், ஸ்டம்ப்பை அடிதார். தொடர்ந்து நடுவரை நோக்கி கோபமாக எதையோ பேசிக்கொண்டே சென்றார்.
அதோடு, கோப்பையை வழங்கும்போது வங்கதேச கேப்டனை நோக்கி “நீங்கள் மட்டும் ஏன் வந்தீர்கள், நீங்கள் போட்டியை சமனில் முடிக்கவில்லை. நடுவர்தான் உங்களுக்காக செய்து கொடுத்தார். அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் நன்றாக இருக்கும் அவர்களையும் அழையுங்கள்” என பேசினார். இதனால், வங்கதேச கேப்டன் கோப்பையைக்கூட வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
ஹர்மன்பிரீத்திற்கு அபராதம்:
இந்நிலையில், ஹர்மன்பிரீத்திற்கு 75 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக போட்டி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலின்படி “ஹர்மன்பிரீத்திற்கு போட்டிக்கான மொத்த ஊதியத்தில் 75 சதவிகிதம் அபராதம் விதிப்பதோடு, வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் மெரிட் புள்ளிகளில் 3 புள்ளிகள் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
பேட்டால் ஸ்டம்ப்பை அடித்ததற்காக 50 சதவிகித ஊதியமும், கோப்பையை வழங்கும்போது மோசமாக நடந்துகொண்டதற்காக 25 சதவிகித ஊதியமும் அபராதமாக விதிக்கப்படுகிறது. அதேபோன்று, பேட்டால் ஸ்டம்பை அடித்ததற்காக 2 மெரிட் புள்ளிகளும், கோப்பையை வழங்கும்போது மோசமாக செயல்பட்டதற்காக 1 மெரிட் புள்ளியும் கழிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இதுதொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ சார்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.