Gautam Gambhir: ஒரு வீரர் மீது முக்கியத்துவம்.. இதனால்தான் இந்திய அணிக்கு கோப்பை இல்லை.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை சாடிய கம்பீர்!
இந்திய கிரிக்கெட்டில் ஒரு தனிப்பட்ட நபரை பற்றி அதிகம் பேசுவதால், கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி பட்டத்தை வெல்ல முடியவில்லை என்று கௌதம் கம்பீர் சாடியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், பாஜக எம்பியுமான கௌதம் கம்பீர், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் ஒரு தனிப்பட்ட நபரை பற்றி அதிகம் பேசுவதால், கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி பட்டத்தை வெல்ல முடியவில்லை என்றும், சமீபத்திய உலகக் கோப்பையிலும் அதுவே செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளில் வெற்றிபெற்றது. தோற்கடிக்கப்படாத அணியாக வலம் வந்த இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.
இந்தநிலையில், இந்திய அணியின் செயல்திறனை விட நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியில் தனிப்பட்ட சாதனைகளையே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முன்னிலைப்படுத்துவதாக கம்பீர் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 9-இலும் வெற்றிபெற்று தோற்கடிக்கப்படாத அணியாக லீக் கட்டத்தை முடித்தது. இந்த 9 போட்டிகளின்போதும், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விராட் கோலியின் சதங்களின் சாதனையில் மட்டுமே சிறப்பு கவனம் செலுத்துகிறது.
சச்சினின் சதம் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா..? என்ற சிறப்பு விளம்பரங்களும் வெளியாகி வருகிறது. ஒரு வீரரை முன்னிலைப்படுத்துவது, சிறப்பாக செயல்பட்ட மற்றொரு வீரருக்கு அநீதி இழைத்துவிடும் என்பதுபோல் ஆகிவிடும். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. (இதில் கம்பீர் விராட் கோலியின் பெயரை பயன்படுத்தவில்லை)
அணியில் இரண்டு வீரர்கள் அரைசதம் அடிக்கும்போது, ஒளிபரப்பாளர்கள் ஒருவரின் அரைசதத்தை மட்டுமே பெரிதாக காட்டுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், மற்ற வீரர் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஒளிபரப்பாளர், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் இணைந்து இதைச் செய்கிறார்கள்.
நீண்ட நாட்களாக இந்திய அணி ஐசிசி பட்டத்தை வெல்லாமல் இருப்பதற்கு பூஜைதான் காரணம். அணியின் செயல்திறனை விட தனிப்பட்ட சாதனைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால், இந்திய அணி சாம்பியன் ஆக முடியாது.” என்றார்.
ரோஹித் சர்மா பற்றி பேசிய கம்பீர்:
தொடர்ந்து ரோஹித் சர்மா பற்றி பேசிய கம்பீர், “2019 உலகக் கோப்பை இந்திய அணிக்கு பிறகு பெரிதாக மாறவில்லை. 2019 இல் அணியில் ஏற்பட்ட மாற்றங்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவான மாற்றங்களே இந்திய அணியில் உள்ளன. ஒரு நல்ல கேப்டனும், தலைவனும் டிரஸ்ஸிங் ரூமை தனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அணிக்கும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதையே ரோஹித் சர்மா செய்துள்ளார். அதனால்தான் அவர் 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால்தான் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கியதிலிருந்து, அவரது வெற்றி சதவீதம் ஆச்சரியமாக இருக்கிறது.
உங்கள் கேப்டன் உங்களுடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. ரோஹித் சர்மாவுக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த மற்ற வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.”என்றார்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.