(Source: Poll of Polls)
Saurabh Netravalkar: இந்தியா - அமெரிக்கா..பாகிஸ்தானை மிரட்டிய சௌரப் நேத்ரவல்கர்! படிக்கப்போன இடத்தில் சம்பவம்!
மும்பையை பூர்வீகமாக கொண்ட சௌரப் நேத்ரவல்கர் அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாஸ்டர்ஸ் படிப்பிற்கு சென்றவர். இப்போது அமெரிக்க அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.
டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை டி20 போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்தவகையில் நேற்று (ஜூன் 6) நடைபெற்ற 11 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியை எதிர் கொண்டு விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் வீழ்த்திய அமெரிக்கா:
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுக்க ஆட்டம் சமநிலையானதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் எடுத்தது.
பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியான தோல்வியை அடைந்தது. அமெரிக்க அணியின் இந்த முக்கியமான வெற்றிக்கு காரணமாக அமைந்தவர் சௌரப் நேத்ரவல்கர்.
மாஸ்டர் டிகிரிக்கு சென்றவர்:
மும்பையை பூர்வீகமாக கொண்ட சௌரப் நேத்ரவல்கர் அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாஸ்டர்ஸ் படிப்பிற்கு சென்றவர். பின்னர் அமெரிக்க அணியில் இடம் பெற்று இப்போது அந்த அணியின் முக்கியமான வீரராக மாறியிருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் விளையாடியவர்.
2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இவர் 5 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேபோல் பாகிஸ்தான் அணி வீரர் அகமது சேஷத் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
அண்டர் 19 இந்திய அணியில் விளையாடியவர்:
சௌரப் நேத்ரவல்கர் விளையாடிய அந்த அண்டர் 19 அணியில் தற்போதைய இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், மந்தீப் சிங், அசோக் மெனாரியா ஆகியோரும் பந்து வீச்சாளர்களான சந்தீப் சர்மா, ஜெயதேவ் உனத்கட் ஆகியோரும் விளையாடி இருக்கின்றனர்.
இப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாமின் விக்கெட்டைத்தான் அப்போது செளரப் நேத்ரவல்கர் வீழ்த்தி இருந்தார்.
இன்று அது நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா கிரிக்கெட் அணிக்காக பாகிஸ்தானை அதே பாபர் அசாம் தலைமையில் எதிர்கொண்டு அந்த அணியை தோற்கடித்து தன்னுடைய அணிக்கு வெற்றியை தேடித் தந்திருக்கிறார் சௌரப் நேத்ரவல்கர் . சர்வதேச போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற இவரது ஆசை கடைசிவரை நிறைவேறாமல் போனாலும் தற்போது இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆடும் வாய்ப்புப் பெற்றதை நிச்சயம் பெருமையாகக் கருதுவார்.