R Ashwin: ருதுராஜ் தான் சரியான ஆள்.. இந்தியாவின் நம்பர் 4-க்கு போட்டா போட்டி.. அஷ்வின் சொன்ன முக்கிய தகவல்
அஸ்வின் கூறுகையில், கெய்க்வாட் சிறந்த பேட்ஸ்மேன். ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்பினார். நீண்ட காலம் விளையாட தகுதியானவர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரிதுராஜ் கைக்வாட் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்தார். கெய்க்வாட்டின் முதல் ஒருநாள் சதம் இதுவாகும். கெய்க்வாட் 83 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் உட்பட 105 ரன்கள் எடுத்தார். இந்த சதத்திற்குப் பிறகு, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ருதுராஜை பாராட்டினார்.
தனது யூடியூப் சேனலில் அஷ்வின் கூறியதாவது, "இந்திய அணி நிர்வாகம், சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய பிறகும் ருதுராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு நிர்வாகத்திற்கு உள்ளது."
மேலும் கூறுகையில், ருதுராஜ் ஒரு தொடக்க வீரர். சிலர் அவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடாது என்கிறார்கள். ஐபிஎல்லில், உங்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களில் இருக்க வேண்டும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ருதுராஜுக்கு 4வது இடத்தில் விளையாட வாய்ப்புகள் உள்ளன. அவர் வேகப்பந்து வீச்சை நன்றாக விளையாடுகிறார். சுழலும் பந்துவீச்சையும் திறமையாக ஆடுகிறார், தொடக்க வீரராக ஆடினால் அவர் ஸ்விங் பவுலிங்கை ஆட வேண்டி இருக்கும், அதனால் அவர் ஆட்டமிழக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் அவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்தால், அதை அவர் அவ்வளவு சந்திக்க வேண்டியிருக்காது. விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுகிறார். அவரிடம் அனைத்து வகையான ஷாட்களும் உள்ளன. 4வது இடத்தில் பேட்டிங் செய்ய அவர் இன்னும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை.
கெய்க்வாட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்று அஷ்வின் கூறினார். அவர் ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்பியுள்ளார். அவர் நீண்ட காலம் விளையாட தகுதியானவர்.
ருதுராஜ் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு நான்காவது இடத்தில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்று அஷ்வின் கூறினார்
அவர் அறிமுகமானதில் இருந்து மூன்று ஆண்டுகளில் வெறும் எட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 இல் தென் ஆப்பிரிக்கா தொடருக்கான ஒருநாள் அணியில் மீண்டும் நுழைந்தார். மூத்த வீரர்கள் திரும்பும்போது, ருதுராஜுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதை இந்தியா அணி நிர்வாகம் எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இல்லாத நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பிய கெய்க்வாட், சதமடித்து ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்குமுட்டுக்கட்டை போட்டுள்ளார்.





















