Ganguly Birthday Special: துணை கேப்டனிலிருந்து கேப்டனாக தாதா செய்த சம்பவங்கள்... பிறந்தநாள் ஸ்பெஷல் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் தாதா சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணி இக்கட்டான சூழலில் தவித்து கொண்டிருந்த போது அணிக்கு தலைமை தாங்கி மீண்டும் நம்பிக்கை வர வைத்தவர் தாதா. அத்துடன் பல புதிய வீரர்களை அணிக்கு கொண்டு வந்து பட்டை தீட்டி இவர் அழகு பார்த்தார். அப்படிப்பட்ட மாபெரும் கேப்டனான தாதா காங்குலி இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் சவுரவ் கங்குலி முதல் முறையாக கேப்டன் பதவியை ஏற்றது முதல் ஜான் ரைட் பயிற்சியாளரானது வரை நடந்தது என்ன? அதில் கங்குலியின் பங்கு என்ன தெரியுமா?
கேப்டனான கங்குலி:
1999ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அப்போது கபில்தேவ் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அந்த சமயத்தில் இந்திய அணியின் துணை கேப்டனாக கங்குலி இருந்தார். கேப்டன் பதவியை சச்சின் டெண்டுல்கர் விட முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வந்தது. அப்போது இந்திய அணியின் அடுத்த கேப்டன் கங்குலி என்ற தகவல் பத்திரிகைகளில் பரவி வந்தது. அப்போது 1999ஆம் ஆண்டு இந்திய-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
அதற்கு அடுத்த நாள் இந்திய ஒருநாள் அணி மற்றும் கேப்டன் அறிவிப்பு வெளியாக இருந்தது. பத்திரிகை செய்திகள் உண்மையானபடி கங்குலி இந்திய அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக கங்குலி புதிய அவதாரம் எடுத்தார்.
துணை கேப்டனாக ராகுல் டிராவிட்:
சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் லார்ட்ஸ் மைதானத்தில் 1996ஆம் ஆண்டு ஒரே டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினர். அப்போது முதல் இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்ந்து வந்தனர். இந்திய அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்ட பிறகு முதல் கூட்டத்தில் அவரிடம் துணை கேப்டன் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு கங்குலி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ராகுல் டிராவிட் பெயரை பரிந்துரைத்தாக தெரிவித்தார். அவரின் யோசனையை ஏற்று ராகுல் டிராவிட் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
பயிற்சியாளராக ஜான் ரைட் தேர்வு:
கங்குலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு பங்களாதேஷ் சென்றது. அதன்பின்னர் கங்குலி மற்றும் டிராவிட் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கும் மேட்ச் ஃபிக்சிங்கில் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. அப்போது இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் தொடர்பாக டிராவிட் மற்றும் கங்குலி இங்கிலாந்தில் விவாதித்துள்ளனர்.
அந்த சமயத்தில் கேண்ட் கவுண்டி அணிக்கு ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவருடைய பெயரை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் ஜான் ரைட்டை கங்குலி நேரில் சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் ஒத்து போக அவருடைய பெயர் பிசிசிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்திய அணியின் பயிற்சியாளராக ஜான் ரைட் நியமிக்கப்பட்டார்.
கேப்டன் கங்குலியின் தாரக மந்திரம்:
இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு கங்குலி இரண்டு தாரக மந்திரங்களை கடைபிடித்தார். ஒன்று திறமையான வீரர்களை கண்டறிவது. இரண்டாவது அந்த வீரர்கள் அனைவரும் அணியில் பயமில்லாமல் கிரிக்கெட் விளையாட வைப்பது. இந்த இரண்டு விஷயங்களையும் கங்குலி சிறப்பாக செய்தார். அதன்விளைவு இந்திய அணிக்கு வந்த இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாட தொடங்கினர். ஒரு பலம் வாய்ந்த இந்திய அணியை கங்குலி கட்டமைத்தார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. கங்குலி செய்த விஷயங்கள் பல காலத்திற்கும் நின்று பேசும் வகையில் அமைந்திருந்தது. அப்படிப்பட்ட கேப்டனாக கங்குலி உருவெடுத்தார். பிறந்தநாள் வாழ்த்துகள் தாதா.. !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்