Stuart Broad: ஒரு ஓவரில் 6 சிக்சர்கள்.. லெஜண்டரி பந்துவீச்சாளர்..! 37 வயதில் ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்..
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு:
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் என்றாலே எதிரணிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது, ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் கூட்டணியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பது தான். அந்த கூட்டணி விக்கெட் வேட்டையை நடத்தி எதிரணியினர் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. இந்நிலையில் தான், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் ஆஷஷ் டெஸ்ட் தொடரின், கடைசி போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.
கண் கலங்கிய பிராட்:
ஓய்வு குறித்து பேசியுள்ள பிராட் “இது ஒரு அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். கிரிக்கெட்டை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நேசிக்கிறேன். இது ஒரு அற்புதமான தொடராக இருந்ததோடு, மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்ததைப் போல் உணர்கிறேன்” என பேசினார். ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஆஷஷ் தொடரின் 5வது போட்டியின் 3வது நாளில், தான் கிர்க்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தனது நீண்ட கால நண்பர்களான ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட்டிடம் கண்கள் கலங்கியவாறு பிராட் தெரிவித்துள்ளார்.
முடிந்தது 17 ஆண்டுகால பயணம்:
கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிராட், ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார். 56 டி-20 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகளையும், 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி-20 போட்டிகளில் இருந்து 2014ம் ஆண்டும், ஒருநாள் போட்டிகளில் 2016ம் ஆண்டும் விலகினர். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வந்தார். இதுவரை, 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 602 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியர்களால் மறக்க முடியாத பிராட்:
பிராட் என்றாலே இந்தியர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது 2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், அவரது ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை விளாசியது தான். அதுபோன்ற சூழலை எதிர்கொண்ட வீரர்களில் பெரும்பாலானோர் அதிலிருந்து மீளமுடியாமல் வாழ்க்கையையே தொலைத்தது உண்டு. ஆனால், ஸ்டூவர்ட் பிராட் அதிலிருந்து மீண்டு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். அண்மையில் தான், டெஸ்ட் போட்டியில் தனது 600வது விக்கெட்டை பூர்த்தி செய்து தற்போது 602 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 600வது விக்கெட்டை வீழ்த்திய 5வது பந்து வீச்சாளர் மற்றும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் தனதாக்கினார். இந்த நிலையில் பிராட் ஓய்வு பெறுவதால், இங்கிலாந்து அணியில் ஏற்பட உள்ள வெற்றிடத்த நிரப்புவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதே உண்மை.