Dawid Malan:வாய்ப்பு கொடுக்காத இங்கிலாந்து.. மோசமான முடிவை எடுத்த டேவிட் மாலன்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் மாலன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்த மாலன்:
டேவிட் மாலன் இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்ட், 30 ஒருநாள் போட்டி 62 டி20 ஆட்டங்களில் விளையாடி 4,416 ரன்கள் எடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு டேவிட் மாலன் எந்த ஒரு போட்டிகளிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படவில்லை. அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி20 ஒருநாள் தொடர்களும் டேவிட் மாலன் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த டேவிட் மாலன் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
நினைத்தபடி விளையாட முடியவில்லை:
2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் முக்கிய பங்கு வகித்தவர். முன்னதாக இங்கிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பேசிய அவர்,"டெஸ்ட் கிரிக்கெட்டை நான் கிரிக்கெட்டின் முக்கிய விஷயமாக கருதுகிறேன். அதுதான் இருப்பதிலேயே உச்சம். ஆனால் அந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னால் நினைத்தபடி விளையாட முடியவில்லை. நான் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.
ஏனென்றால் என்னுடைய புள்ளி விவரங்களை காட்டிலும் நான் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக தான் விளையாடுவேன். ஆனால் அது களத்தில் எதிர் ஒலிக்கவில்லை. நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆர்வமாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்"என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.