ENG vs NZ World Cup 2023: தொடங்கியது உலகக் கோப்பை திருவிழா; இங்கிலாந்தை பழி தீர்க்குமா நியூசிலாந்து; டாஸ் வென்று பந்து வீச முடிவு
ODI World Cup 2023 ENG vs NZ: 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் போட்டியோடு கோப்பையை இழந்த நியூஐலாந்து, இந்த தொடரின் முதல் போட்டியில் பழி தீர்க்கும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ODI World Cup 2023 ENG vs NZ: உலகக் கோப்பை 2023 அதாவது 13வது உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவரத்துக்கு மத்தியில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை 2023 முதல் போட்டிக்கான இரு அணிகள் விபரம்
இங்கிலாந்து அணி:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
நியூசிலாந்து அணி:
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மாட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் போல்ட்
2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியது முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லாத இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லாத ஒரு புதிய அணி கோப்பையை வெல்லும் என்பது உறுதியானது. இறுதியில் இந்த போட்டியின் வெற்றி இங்கிலாந்து அணிக்கு வசப்பட இங்கிலாந்து அணி இயான் மோர்கன் தலைமையில் தனது முதல் உலகக்கோப்பையை வென்றது. இதன் மூலம் 2015 மற்றும் 2019 ஆகிய அடுத்தடுத்த உலகக்கோப்பைத் தொடர்களில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை இழந்தது நியூசிலாந்து.
பழிதீர்க்குமா நியூசிலாந்து?
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போட்டியோடு கோப்பையை இழந்த நியூஐலாந்து அணி உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் வீழ்த்தி பழி தீர்க்கும் என நியூசிலாந்து ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர். ஆனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நேருக்கு நேர்
ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 95 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன். அதில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 44 முறை வெற்றி பெற்று, வெற்றிக்கணக்கில் சம எண்ணிக்கையில் உள்ளன. இது தவிர்த்து 3 போட்டிகள் ட்ராவில் முடிய, 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மழைக்கு வாய்ப்பா?
உலகக் கோப்பை 2023- இன் முதல் போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் பனிப் பொழிவு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.