ஏமாற்றப்பட்டாரா எம்.எஸ். தோனி? ரூ. 15 கோடி அபேஸ்.. முன்னாள் பிசினஸ் பார்ட்னர் ஏமாற்றியதாக பரபர வழக்கு
15 கோடி ரூபாய் ஏமாற்றியதாக முன்னாள் வணிக பங்குதாரர் மீது தோனி புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆக திகழ்ந்தவர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். பதற்றமான சூழலில் செம கூலாக விளையாடுவது, ஜெயிக்க முடியாத போட்டியில் அணியை ஜெயிக்க வைப்பது என அவரின் முடிவுகளுக்கும் கூட இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சொல்லப்போனால் தோனி “கேப்டன் கூல்” என்றே அழைக்கப்படுகிறார்.
இப்படியான தோனி கடந்த 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். டி20 போட்டிகளில் இருந்தும் 2019 ஆம் ஆண்டு விலகினார். தற்போது தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
ஏமாற்றப்பட்டாரா எம்.எஸ். தோனி?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது பல்வேறு விதமான வணிகத்தில் தோனி ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தனது முன்னாள் வணிக பங்குதாரர் மீது அவர் பரபரப்பு புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் 15 கோடி ரூபாய் ஏமாற்றியதாக மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஸ் மீது புகார் அளித்துள்ளார்.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஸ் ஆகியோருக்கு எதிராக ராஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் பின்னணி:
தோனியின் பெயரில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கிரிக்கெட் அகாடமிகளை திறப்பதற்காக 2017 ஆம் ஆண்டு தோனியுடன் திவாகர் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அவர் கடைபிடிக்கவில்லை என கூறப்படுகிறது. ஒப்பந்தத்தின்படி, உரிமைக் கட்டணத்தையும் லாபத்தையும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், அனைத்து விதிகளும் மீறப்பட்டதாகக் கூறி, கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடனான ஓப்பந்தத்தில் இருந்து தோனி விலகினார். பின்னர், அவர்களுக்கு பல்வேறு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியுள்ளார் தோனி. ஆனால், எதற்கும் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தோனி தரப்பு வழக்கறிஞர் தயானந்த் சிங் கூறுகையில், "ஆர்கா நிறுவனம் தோனியை ஏமாற்றியுள்ளது. இதனால், 15 கோடி ரூபாய்க்கு மேல் அவர் இழந்துள்ளார்" என்றார்.
இதையும் படிக்க: ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை - செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!