Natarajan: உலகக் கோப்பையில் தமிழக வீரர்கள் இல்லாதது வருத்தம் - சேலத்தில் நடராஜன் பேட்டி
உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பேச்சாளர் நடராஜன் பேட்டி
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தனியார் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம் விற்பனை நிறுவனத்தை இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி சிறப்பாக தேர்வு செய்துள்ளனர். இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என அனைவரும் கலந்துள்ளனர். இந்தியாவில் உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதால் நமக்கு சாதகமாக உள்ளது. இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால், இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்றார். மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவாலான அணிகளாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் இருந்தாலும், இந்தியாவில் நடைபெறுவதால் நமக்கு சாதகம் அதிகமாக உள்ளதாகவும், இதனால் இந்தியா மீண்டும் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதை காண்பதற்கு ஆர்வமாக உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அனைத்து அணிகளும் சரிசமமாக சவாலான அணியாகவே உள்ளது. உலகக்கோப்பை போட்டியில், எந்த அணி வந்தாலும் இந்தியா வென்று விடும். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் அடுத்த தலைமுறை வீரர்களை வளர்த்து வருகின்றனர். இதனால் புதிய இளம் வீரர்கள் அணிக்குள் தேர்வாகி வருகின்றனர். இளம் வீரர்கள் நன்றாக சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்குள் வாய்ப்பிருக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. தமிழக வீரர்கள் ஒருவராவது உலகக்கோப்பை அணியில் பங்கேற்று வந்தனர். ஆனால், இந்த முறை இல்லாதது தமிழகத்தில் எனக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வருத்தமாக தான் உள்ளது” என்றும் கூறினார்.