TNPL 2023: திருப்பூர் அணிக்கு ஆப்பு வைத்த சேப்பாக் கில்லீஸ்... அடுத்தடுத்து தோற்கும் சாய் கிஷோர் படை..!
டிஎன்பிஎல் 7 வது சீசனின் 5 வது போட்டியில் ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த 2016 ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது 7வது சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய 5வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
திருப்பூர் தமிழன் - சேப்பாக்கம் மோதல்:
முதலில் டாஸ் வென்ற ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக துஷார் மற்றும் சத்ருவேட் களமிறங்கினர். இருவரும் ஒற்றை இலக்க எண்களில் வெளியேற, பின்னால் வந்த விஷால் வைத்யாவும் 7 ரன்களில் நடையைக்கட்டினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ராதாகிருஷ்ணன் ஓரளவு தாக்குப்பிடித்து 33 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து 36 ரன்களில் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் கலக்கிய விஜய் சங்கர் 28 பந்துகளில் 28 ரன்களும், விவேக் 18 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து நம்பிக்கை கொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் கில்லீஸ் அபார வெற்றி:
சேப்பாக் கில்லீஸ் சார்பில் ஹரிஸ் குமார் மற்றும் ராகில் தலா 2 விக்கெட்களும், பாபா அபராஜித் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரதோஷ் பால் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து இன்னிங்ஸை தொடங்கிய ஜெகதீசன், அஜித் ராம் வீசிய 4வது ஓவரில் க்ளீன் போல்டானார். அடுத்ததாக உள்ளே வந்த பாபா அபாராஜித், திருப்பூர் அணியின் பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினார். மறுமுணையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரதோஷ் பால் 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேற, சஞ்சய் யாதவும் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து, சிக்ஸர் மற்றும் பவுண்டரிக்கு பந்துகளை அபாராஜித் அனுப்ப 15.4 ஓவர்களில் சேப்பாக் கில்லீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. பாபா அபாராஜித் 29 பந்துகளில் 46 ரன்களுடனும், ஹரிஸ் குமார் 13 பந்துகளில் 12 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
திருப்பூர் அணி சார்பில் அஜித் ராம் 2 விக்கெட்களும், முகமது அலி 1 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது.
சேப்பாக் கில்லீஸ் அணிக்காக 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய ஹரிஸ் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.