Border Gavaskar Trophy: நானும் கிளம்புறேன்.. ஆஸ்திரேலியாவில் நீளும் காயமடைந்த வீரர்களின் பட்டியல்.. இந்தியாவிற்கு சாதகமா?
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் ஆல் - ரவுண்டரான கேமரூன் கிரீன் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக கேமருன் கிரீன் விலகல்?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட, பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்க உள்ளது. தொடரின் முதல் போட்டி வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரரகள் அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான கேமரூன் கிரீன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. துணைகேப்டன் ஸ்மித்தும், முதல் போட்டியில் கிரீன் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், கை விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து கிரீன் தற்போது தான் குணமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவிற்கு பின்னடைவு:
ஏற்கனவே காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான, ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இந்நிலையில், கேமரூன் கிரீனும் விளையாடாவிட்டால், இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறும். இதன் காரணமாக ரென்ஷா அல்லது ஹேண்ட்ஸ்காம்ப் அகிய இருவரில் ஒருவர், முதல் போட்டியில் களமிறங்கலாம் எனவும், அதோடு வெறும் 4 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே ஆஸ்திரேலிய அணி களம் காணும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு, இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரை இந்திய அணி, குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட முடியும். 2012-ம் ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்திய அணி உள்ளூரில் தொடர்ந்து 15 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய 3 டெஸ்ட் போட்டி தொடர்களையும் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி உள்ளது. இதனால் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்குடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர், வரும் 17ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.