ODI World Cup 2023: தொடர்ந்து எழுந்த புகார்கள்... மேம்படுத்தப்பட இருக்கும் 5 மைதானங்கள் .. 500 கோடியை இறக்கிய பிசிசிஐ..!
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரானாது இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியாவில் 5 மைதானங்களை மேம்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 500 கோடியை பிசிசிஐ ஒதுக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரானாது இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் பிசிசிஐ ஐந்து பெரிய மைதானங்களை மேம்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இதற்காக 500 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மைதானங்களில் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட் வாரியங்களை கணக்கிட்டால், பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து வருகிறது. இருப்பினும், பிசிசிஐ கீழ் இயங்கும் மைதானங்களில் உள்ள மோசமான வசதிகள் மற்றும் பிட்ச் தன்மை குறித்து ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வந்தனர். பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றபொது, ரசிகர்கள் கழிவறை மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும், மைதானத்தில் உள்ள பல இருக்கைகள் சேதம் அடைந்து இருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் புகாரை முன் வைத்தனர்.
The vibe at Arun Jaitley stadium at this last ball thriller was immaculate! #DelhiCapitals #DCvsMI pic.twitter.com/nm5XCNpEYa
— Khushi Singh (@KhushiSinghh18) April 11, 2023
5 மைதானங்கள்:
இதையடுத்து 5 மைதானங்களை மேம்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன், மொஹாலியில் உள்ள பிந்தரா மைதானம், மும்பையில் உள்ள வான்கடே மைதானம் உள்ளிட்ட 5 மைதானங்களை மேம்படுத்தப்பட இருக்கின்றன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடருக்கு முன்பாகதான் மும்பை வான்கடே மைதானம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், ரசிகர் ஒருவர் மைதானத்தில் கழிப்பறை வசதி குறைவாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் குறை கூறி இருந்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன்:
ஒதுக்கப்பட்ட 500 கோடியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த திட்டத்திற்கு ரூ.100 கோடி, ஹைதராபாத் மைதானத்திற்கு ரூ.117.17 கோடி, ஈடன் கார்டன் மைதானத்திற்கு ரூ.127.47 கோடி, மொஹாலி மைதானத்திற்கு ரூ.79.46 கோடி, வான்கடே மைதானத்திற்கு ரூ. 78.82 கோடி செலவு செய்யப்பட இருக்கிறது. இதில், அதிகபட்ச தொகை உலக புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கே செலவு செய்யப்பட இருக்கிறது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக இந்தியாவில் உள்ள 12 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, தர்மஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பையின்போது 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெற இருக்கிறது. கடைசியாக 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.