ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
ADMK: கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

ADMK: கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
செங்கோட்டையன் அதிருப்தி
கோவை அன்னூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அத்திக்கடவு அவினாசி திட்டதக்குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படாததால் அதில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப்பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்களே மேடையில் இல்லை” என செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பான அழைப்பிதழில் கூட, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் மீண்டும் விரிசலா?
கோவை அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிலையில், கட்சி சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால், அத்திக்கடவு - அவினாசி திட்டம் அமைய உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இன்னும் ஓராண்டில் தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழச்செய்துள்ளது.
செங்கோட்டையன் அதிருப்தி??
— ABP Nadu (@abpnadu) February 10, 2025
எடப்பாடி பழனிசாமி பாராட்டுவிழாவில் பங்கேற்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு#Sengottaiyan #AIADMK #ADMK #Tamilnadu #Tamilnews @KASengottaiyan @EPSTamilNadu pic.twitter.com/jJ7FseLbEH
ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் ஒரு தனி அணி இயங்கி வருகிறது. டிடிவி தினகரன் அமமுக எனும் தனிக்கட்சியையே நடத்தி வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையனின் அதிருப்தி அதிமுகவில் மேலும் விரிசலை தூண்டுமோ என தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.





















