மனைவிகளுக்கு நோ சொன்ன பிசிசிஐ! புதிய கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியான இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
கொரோனாவுக்கு முந்தைய விதியை மீண்டும் அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிர்ச்சியூட்டும் ஒயிட்வாஷ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெளிநாட்டு தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
பிசிசிஐ அதிகாரிகள், கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு இடையேயான மறுஆய்வுக் கூட்டத்தில், இந்திய வீரர்களின் மனைவிகள் முழு சுற்றுப்பயணத்திலும் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு முந்தைய விதியை மீண்டும் அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி வீரர்களுடன் மனைவிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முழு சுற்றுப்பயணத்திற்கும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 45 நாட்களுக்கு மேல் நீடிக்கும் ஒரு போட்டி அல்லது தொடருக்கு, மனைவி அல்லது குடும்பத்தினர் வீரருடன் 14 நாட்கள் மட்டுமே தங்க முடியும். மேலும் அதுவே குறுகிய சுற்றுப்பயணங்களாக இருந்தால், தங்குவதற்கான வரம்பு ஏழு நாட்களாகக் குறைக்கப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் போன்ற பல கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் அனைத்து ஆட்டங்களிலும் கலந்து கொண்டனர். சுற்றுப்பயணம் முழுவதும் குடும்பத்தினருடன் இருப்பதால் வீரர்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக வாரியம் கருதுகிறது.
மேலும், அனைத்து இந்திய வீரர்களும் அணி பேருந்தில் பயணிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பல வீரர்கள் தனியாக பயணம் செய்வதையே விரும்பினர். ஆனால் இப்போது அது நடக்காது. அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து வீரர்களும் அணி பேருந்தில் ஒன்றாக பயணிக்க வேண்டியிருக்கும்.
"அணி ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, இப்போது அனைத்து வீரர்களும் அணி பேருந்தில் மட்டுமே பயணிப்பார்கள். ஒரு வீரர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், அவர் தனித்தனியாக பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்" என்று வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், வீரர்களைத் தவிர, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மேலாளர் அணியின் ஹோட்டலில் தங்குவதைத் தடுக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அவர் விஐபி ரூமில் இருந்து போட்டிகளைப் பார்க்கவும் அனுமதிக்கப்படமாட்டார். மேலும் அணியின் பேருந்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.