”நாங்க கேட்டோம்.. அவரு ஓக்கே சொல்லல..” கேப்டன் கோலியை மாற்றியது தொடர்பாக கங்குலி பேச்சு..
டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நேற்று மிகப்பெரிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதாவது இனிமேல் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஏற்கெனவே டி20 தொடர்களுக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் அணிக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ திடீரென விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டது. எனினும் விராட் கோலி அதை ஏற்க மறுத்துவிட்டார். ஆகவே தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு இரண்டு கேப்டன் இருக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தனர்.
A leader who led the side with grit, passion & determination. 🇮🇳🔝
— BCCI (@BCCI) December 9, 2021
Thank you Captain @imVkohli!👏👏#TeamIndia pic.twitter.com/gz7r6KCuWF
அதனால் தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித்தையும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியையும் கேப்டனாக அறிவிக்க தேர்வுக்குழு முடிவு எடுத்தது. அதன்பின்னர் இந்த முடிவை நானும் தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மாவும் விராட் கோலியிடம் பேசினோம். அவர் நாங்கள் கூறியதை ஏற்று கொண்டார். அதன்பின்னர் தான் இந்த அறிவிப்பு வெளியானது. விராட் கோலி சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தினார். அதேபோல் இனிமேல் ரோகித் சர்மாவும் செய்ய எனது வாழ்த்துகள். விராட் கோலியிடம் இந்த முடிவு குறித்து தெரிவித்த பிறகே புதிய கேப்டன் அறிவிப்பு வெளியானது” எனக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அப்போது முதல் 8 ஆண்டுகள் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வந்தார். இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி 95 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். அதில் 65 போட்டிகளில் வெற்றியும், 27 தோல்வியும், ஒரு போட்டி டையும், 2 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான சதவிகிதம் வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க: கேப்டன்சியில் டாப் சாதனைகள் இருந்தும் கோலியை தூக்கியது சரியா? BCCI முடிவு அநீதியா? முழு டேட்டா இங்கே..