BAN vs USA: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எச்சரிக்கை! வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அமெரிக்கா..!
அமெரிக்கா தனது பலத்தையும் வெளிப்படுத்தி நஜ்மல் ஹூசைன் ஷாண்டோ தலைமையிலான வங்கதேசத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அமெரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியிலும் அமெரிக்கா தனது பலத்தையும் வெளிப்படுத்தி நஜ்மல் ஹூசைன் ஷாண்டோ தலைமையிலான வங்கதேசத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அமெரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, சர்வதேச அளவில் வளர்ந்து வரும் வங்கதேசத்திற்கு கத்துக்குட்டி அணியான அமெரிக்கா இரண்டாவது முறையாக வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
போட்டியில் என்ன நடந்தது..?
ப்ரேரி வியூ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலக்கை துரத்திய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அமெரிக்க அணியின் இந்த இரண்டாவது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் அலி கான். இவர் வங்கதேச அணியை சேர்ந்த ஷகிப் அல் ஹசனை 18வது ஓவரில் வீழ்த்தினார். அதனை தொடர்ந்து, மூன்றாவது பந்தில் தன்சிம் ஹசன் ஷேக்கையும், இன்னிங்ஸின் 20வது ஓவரில் ரிஷாத் ஹூசைனை வீழ்த்தினார். பாகிஸ்தானில் பிறந்த அலி கான் தற்போது அமெரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் நேற்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 3.3 ஓவர்கள் வீசி வெறும் 25 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
USA Win the Thriller and Claim the Series Over Bangladesh! 🏏🇺🇸 Remarkable skill and determination shown in the series by the World Cup hosts to secure this historic win. 🎉🏆
— FanCode (@FanCode) May 24, 2024
.
.#USACricket #T20I #USAvsBAN #FanCode pic.twitter.com/FazXZeUjIi
முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா:
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் அமெரிக்கா பேட்டிங் செய்தது. கேப்டன் மோனக் படேல் மற்றும் ஸ்டீவன் டெய்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 28 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவன் டெய்லரின் விக்கெட்டை ரிஷாத் ஹூசைன் வீழ்த்தினார். அடுத்ததாக உள்ளெ வந்த ஆண்ர்டே காஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ஆரோன் ஜோன்ஸ் 35, கோரி ஆண்டர்சன் 11, ஹர்மீத் சிங் பூஜ்யம், மோனக் பட்டேல் 42, நிதிஷ் குமார் 7 (நாட் அவுட்), ஷெட்லி (நாட் அவுட்) 7 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம், அமெரிக்க அணி 144 ரன்கள் குவித்தது.
வங்கதேச தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிஷாத் ஹூசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
கட்டாய வெற்றிக்காக களமிறங்கியது வங்கதேசம். ஒரு ரன் எடுத்த நிலையில் சௌமியா சர்க்காரை சவுரப் நேத்ரவல்கர் ஆட்டமிழக்கச் செய்ய, 19 ரன்கள் எடுத்த நிலையில் தன்ஜித் ஹசன் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, நஸ்முல் ஹசன் ஷான்டோ 3, தௌஹித் ஹிரிடோய் 25, ஷகிப் அல் ஹசன் 30, மஹ்முதுல்லா 3, ஜாகர் அலி நான்கு, ரிஷாத் ஹுசைன் 9, தன்சிம் ஹசன் ஷகிப் 0, ஷோரிபுல் இஸ்லாம் 1, முஸ்தபிசுர் ரஹ்மான் 1 (நாட்அவுட்) ஆகியோர் இப்படியான ரன்கள் மட்டுமே எடுக்க வங்கதேச அணி 138 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அமெரிக்கா தரப்பில் அலிகான் 3 விக்கெட்டுகளையும், சவுரப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய அணிக்கு எச்சரிக்கையா..?
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இது ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் அமெரிக்காவும் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன. எனவே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும். வங்கதேசத்துக்கு எதிராக அமெரிக்கா விளையாடிய விதம், இந்த அமெரிக்க அணியை இந்திய அணி எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது என்பதை உணர்த்தியுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.