AUS vs PAK Innings Highlights: ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டை - அனல் பறந்த அஃப்ரிடி பந்துவீச்சு - பாகிஸ்தானுக்கு 368 ரன்கள் இலக்கு
AUS vs PAK Innings Highlights: பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக மாறியுள்ளது. குறிப்பாக புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தால் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளதால், அனைத்து அணிகளும் வெற்றி மட்டும் இல்லாமல் ரன்ரேட்டுக்காகவும் போராடி வருகின்றன.
இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னச் சாமி மைதானத்தில் பலமான அணிகளான பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதிக் கொண்டன. இதில் பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியா 6வது இடத்திலும் உள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியான மிட்ஷெல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி தொடக்க 5 ஓவர்களில் மிகவும் நிதானமாகவே ஆடினர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் மந்தமாகவே நகர்ந்தது. ஒரு கட்டத்திற்குப் பின்னர் இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சினை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இவர்கள் இருவரின் ஆட்டத்தினை கட்டுப்படுத்த பாகிஸ்தான் கேப்டன் தன்னிடம் இருந்த அனைத்து பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்திப் பார்த்தும் எந்த பயனும் அளிக்கவில்லை. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாசினர். மிட்ஷெல் மார்ஷ் கொடுத்த எளிமையான கேட்ச் வாய்ப்பினையும், வார்னர் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பையும் பாகிஸ்தான் வீரர்கள் வீணடித்தனர்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இருவரும் சிக்ஸர் மழை பொழியத் தொடங்கினர். இருவரும் ஒரு கட்டத்தில் அரைசதம் கடந்து விறுவிறுவென சதத்தை நோக்கி முன்னேறி, அடுத்தடுத்த பந்துகளில் சதம் விளாசினர். இந்த தொடரில் ஆஸ்திரேலியா தரப்பில் அடிக்கப்பட்ட முதல் சதம் வார்னர் சதமாகவும், இரண்டாவது சதம் மார்ஷ் சதமாகவும் இடம்பெற்றது. இருவரும் இணைந்து ருத்ரதாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்த, பாகிஸ்தான் பவுலர்களை பார்க்கும்போது, ’எப்படி போட்டாலும் அடிக்கறாங்க' என புலம்புவதைப் போன்று இருந்தது.
அதிரடியாக பவுண்டரிகள் விளாசி வந்த மிட்ஷெல் மார்ஷ் தனது விக்கெட்டினை 108 பந்துகளில் 10 பவுண்டரி 9 சிக்ஸர்கள் விளாசி 121 ரன்கள் குவித்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். மார்ஷ் தனது விக்கெட்டினை இழந்தபோது அணியின் ஸ்கோர் 259 ரன்களாக இருந்தது. இந்த தொடரில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும், உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா தரப்பில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. இதற்கடுத்து வந்த மேக்ஸ்வெல் அடுத்த பந்திலேயே விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இதையடுத்தும் அதிரடி காட்டி வந்த வார்னர் 150 ரன்களைக் கடந்து விளையாடி வந்தார். ஒரு கட்டத்தில் வார்னர் 200 ரன்கள் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். இவர் 14 பவுண்டரி 9 சிக்ஸர் விளாசியிருந்தார்.
அதன் பின்னர் வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பவுண்டரிகள் விளாச ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 350 ரன்களைக் கடக்க உதவியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வார்னர் 163 ரன்களும், மார்ஷ் 121 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அஃப்ரிடி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.