IND vs NEP: ஜெய்ஸ்வால் அதிரடி சதம்.. ரிங்கு கடைசி நேரத்தில் காட்டடி.. நேபாள அணிக்கு 203 ரன்கள் இலக்கு..!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே கால் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இரு அணிகளும் மோதும் இந்தப் போட்டியானது சீனாவை அடுத்த ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக முதல்முறையாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுகிறார். நேபாள அணிக்கு வழக்கம்போல் கேப்டனாக ரோகித் பவுடல் தலைமை தாங்குகிறார்.
டி20 தரவரிசை அடிப்படையில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நேபாள அணி இரண்டு போட்டிகளில் விளையாடி வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது. நேபாளம் தனது முதல் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக விளையாடி பல உலக சாதனைகளை படைத்தது. இந்திய அணிக்காக இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் ஆகியோர் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அறிமுகமாகிறார்கள். ஐபிஎல் தொடரில் ஜிதேஷ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும், சாய் கிஷோர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ருதுராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து, அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டாக, பின்னால் வந்த திலக் வர்மா 2 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுபுறம் நேபாள அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பயம் காட்டிய ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உதவியுடன் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ச்சியாக அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், அடுத்த இரண்டாவது பந்தில் 100 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் கிடைக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களாய் விரட்ட, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
சிவம் துபே 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 25 ரன்களுடனும், ரிங்கு சிங் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
நேபாள அணி சார்பில் அதிகபட்சமாக தீபேந்திர சிங் ஐரே 2 விக்கெட்களும், சோம்பல் மற்றும் சந்தீப் லாமிச்சானே 1 தலா ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தனர்.
விளையாடும் இந்தியா லெவன்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஆர் சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.
விளையாடும் நேபாளம் லெவன்:
ரோஹித் பவுடல் (கேப்டன்), குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), சந்தீப் ஜோரா, குல்சன் ஜா, குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரே, சோம்பால் கமி, கரண் கேசி, அவினாஷ் போஹாரா, சந்தீப் லாமிச்சானே.