Asia Cup 2023: ஆசியக்கோப்பை கிரிக்கெட்... மிரட்டப்போகும் பேட்ஸ்மேன்கள்.. காத்திருக்கும் சாதனைகள்.. நீளும் பட்டியல்
ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் படைக்கப்பட வாய்ப்புகள் உள்ள புதிய சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் படைக்கப்பட வாய்ப்புகள் உள்ள புதிய சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆசியக்கோப்பை 2023:
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது இன்று தொடங்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், நடப்பு தொடரில் படைக்க வாய்ப்புள்ள புதிய சாதனைகள் சிலவற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஒருநாள் போட்டிகளில் 13000 ரன்களை எட்டும் கோலி..!
கோலி தற்போது வரை 265 போட்டிகளில் விளையாடி 12,898 ரன்கள் எடுத்துள்ளார். 13000 ரன்களை பூர்த்தி செய்ய 102 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த ரன்களை அடுத்த 55 போட்டிகளுக்குள் கோலி சேர்த்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக, சச்சின் 321 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எட்டியது தான் சாதனையாக உள்ளது. அதோடு, ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையையும் கோலி பெறுவார்.
10 ஆயிரம் ரன்களை நெருங்கும் ரோகித் சர்மா:
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 48.69 சராசரியுடன் 9837 ரன்கள் எடுத்துள்ளார். 10,000 ரன்களை பூர்த்தி செய்ய 163 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. நடப்பு தொடரிலேயே ரோகித் இந்த ரன்களை சேர்த்தால், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை சேர்த்த 15வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் பெற உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்களை விளாசியதை தொடர்ந்து, ஆசியக்கோப்பை தொடரில் ரோகித் களமிறங்குகிறார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 6000 ரன்கள்:
இலங்கையின் மூத்த ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் 41.01 சராசரியில் 5865 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 6000 ரன்களை பூர்த்தி செய்ய 135 ரன்கள் தேவைப்படுகிறது. அவ்வாறு எட்டினால், ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை பூர்த்தி செய்த ஒன்பதாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற முடியும்.
ரோகித்திற்கான இலக்கு:
ரோகித் சர்மா ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை 46.56 சராசரியில் 745 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 1000 ரன்களை பூர்த்தி செய வெறும் 255 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்த ரன்களை விளாசினால் ஆசியக்கோப்பை தொடரில் 1000 ரன்களை பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். ஜெயசூர்யா மற்றும் சங்கக்காரவுக்குப் பிறகு ஆசியக் கோப்பை வரலாற்றில் (ODI) 1000 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ரோகித் பெற முடியும். அதிக ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் சச்சின் டெண்டுல்கரையும் (971) அவர் கடக்கலாம்.
வெளிநாடுகளில் 4000 ரன்கள்:
வங்கதேச ஆல்ரவுண்டரும் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன், ஒருநாள் போட்டியில் வெளிநாடுகளில் இதுவரை 39.50 சராசரியில் 3832 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் 168 ரன்களை சேர்த்தால், தமிம் இக்பாலுக்கு (4323) பிறகு வெளிநாட்டு மண்ணில் நான்காயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வங்கதேச வீரர் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் பெறுவார்.