Kohli Rohit Record: ஆசியக்கோப்பை 2023.. களத்தில் மல்லுக்கட்டும் கோலி, ரோகித்.. தப்புமா சச்சினின் சாதனை?
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி மற்றும் ரோகித் களமிறங்குகின்றனர்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி மற்றும் ரோகித் களமிறங்குகின்றனர்.
ஆசியக்கோப்பை 2023:
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது இன்று தொடங்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சாதனைகள்:
இந்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும், ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இதுவரை படைக்கப்பட்ட பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட உள்ளன. அதோடு, பல புதிய சாதனைகள் படைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில், சச்சினின் சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பை, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோலி மற்றும் ரோகித் பெற்றுள்ளனர்.
சச்சினின் சாதனை என்ன?
22 ஆண்டுகள் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிய இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், மொத்தம் 971 ரன்களை குவித்து உள்ளார். இதன் மூலம், ஆசிய தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்திலும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
முதலிடத்தில் யார்?
இந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 745 ரன்களுடன் 5வது இடத்திலும், முன்னாள் கேப்டன் கோலி 613 ரன்களுடன் 12வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்த நிலையில் நடப்பு தொடரில் ரோகித் சர்மா கூடுதலாக 226 ரன்களையும், கோலி 385 ரன்களையும் சேர்த்தால் சச்சினின் சாதனையை தகர்க்க முடியும் சூழல் உள்ளது. நடப்பு தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், வரும் 2ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
பட்டியலில் யார் டாப்?
ஆசியக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், ஆயிரத்து 220 ரன்களுடன் இலங்கை வீரர் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, சக இலங்கை வீரரான சங்ககாரா ஆயிரத்து 75 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேநேரம், கடந்த 1984ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரை அதிகபட்சமாக இந்திய அணி 7 முறையும், இலங்கை அணி 6 முறையும் கைப்பற்றியுள்ளது.
இரண்டு சுற்றுகள்:
ஆசிய தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதில் ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.