Asia Cup 2022, SL vs PAK: சுழலில் மிரட்டிய ஹசரங்கா..! பேட்டிங்கில் மிரட்டிய நிசங்கா..! பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய இலங்கை..!
SL vs PAK, Match Highlight: ஆசிய கோப்பையில் கடைசி சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுப் போட்டியின் கடைசி போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று துபாய் மைதானத்தில் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறவிட்டதால் இந்த போட்டியின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், அணியின் ஸ்கோர் 28 ரன்களை எட்டியபோது தொடக்க வீரர் ரிஸ்வான் 14 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர், அவருடன் பக்கர் ஜமான் ஜோடி சேர்ந்தார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த பாபர் அசாம் இந்த போட்டியில் நிதானமாக ரன்களை சேர்த்தார்.
அணியின் ஸ்கோர் 68 ரன்களை எட்டியபோது பக்கர் ஜமான் 13 ரன்களில் கருணரத்னே பந்தில் ஆட்டமிழக்க, கேப்டன் பாபர் அசாம் ஹசரங்கா சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 30 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த குஷ்தில்ஷா 4 ரன்களில் ஆட்டமிழக்க, இப்திகார் அகமது 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் 91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
அதற்கு பின்னர், பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. அதிரடி வீரர் ஆசிப் அலி ஹசரங்காவின் முதல் பந்திலே போல்டாகி டக் அவுட்டானார். ஹசன் அலியும் டக் அவுட்டாக, ஒரு முனையில் முகமது நவாஸ் மட்டும் அதிரடி காட்டினார். அவர் 18 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. இறுதியில், பாகிஸ்தான் அணி 19.;1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் ஹசரங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், மதுஷன் 2 விக்கெட்டுகளையும், கருணரத்னே, டி சில்வா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த குணதிலகாவும் டக் அவுட்டானார். 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணிக்கு நிசங்கா மட்டும் நிதானமான தொடக்கத்தை அளித்தார். அடுத்து வந்த தனஞ்செய டி சில்வாவும் 9 ரன்களில் ஆட்டமிழக்க, நிசங்காவுடன் ராஜபக்சே ஜோடி சேர்ந்தார். இலக்கு மிகவும் குறைவு என்பதால் இருவரும் இணைந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். பனுகா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார், அணியின் ஸ்கோர் 80 ரன்களைத் தொட்டபோது பனுகா 19 பந்துகளில் 2 சிக்ஸருடன் 24 ரன்களில் அவுட்டானார்.
மறுமுனையில் நிசங்கா பவுண்டரிகளாக விளாசி நெருக்கடியை குறைத்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சனகா அதிரடி காட்டினார். அவர் 1 பவுண்டரியும், 2 சிக்ஸரும் விளாசினார். வெற்றியின் விளிம்பில் இலங்கை அணி நெருங்கியபோது சனகா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும், இலங்கை அணி கடைசியில் 17 ஓவர்களிலே 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிசங்கா 48 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 55 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது அந்த அணிக்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.