Watch Video: 'இதை பேக் பண்ணி உள்ளே...'-பென் ஸ்டோக்ஸை எச்சரித்த மார்க் வூட் வைரல் வீடியோ !
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாளான இன்று 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திணறி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சின் போது ஒரு தருணம் நடைபெற்றுள்ளது. அந்த தருணம் தொடர்பான வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ கணக்கில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வூட் இடம் வர்ணையாளர் கேள்விகளை கேட்டு கொண்டுள்ளார். அந்த சமயத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு புறம் இருந்து தன்னுடைய கையில் உள்ள பாட்டிலை எடுத்து தண்ணீரை மார்க் வூட் மீது வேண்டுமென்றே தெளித்து வருகிறார்.
Ben Stokes finally broke Mark Wood's concentration! 💦💦#Ashes pic.twitter.com/KKObpTkXzV
— cricket.com.au (@cricketcomau) December 27, 2021
முதல் இரண்டு முறை அதை பார்த்து எதுவும் சொல்லாமல் இருந்த மார்க் வூட் கடைசியாக, “அதை பேக் செய்து உள்ளே வைத்துவிடு” என்று பென் ஸ்டோக்ஸை எச்சரித்தார். இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த வீடியோவை பதிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் கணக்கு, “பென் ஸ்டோக்ஸ் மார்க் வூட்டின் கவனத்தை சிதறடித்தார்” என்ற வாசகத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் பலரும் இது தொடர்பான தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சென் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தன்னுடைய 168ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜேம்ஸ் ஆண்டர்சென் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் 200 டெஸ்ட் போட்டிகளுடன் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: செஞ்சுரியனில் தரிகிட தரிகிட தா போட்ட மழை : இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து !