பெர்த்தில் வொர்த் பவுலிங்.. மிரட்டிய ஆஸ்திரேலியாவை அதட்டிய இங்கிலாந்து - ஆஷஸ் முதல் டெஸ்ட் ஸ்கோர் இதான்!
பெர்த் மைதானத்தில் இங்கிலாந்து 172 ரன்களுக்கு முதல் விக்கெட் இழப்பிற்கு ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலே மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர் ஆஷஸ். பல ஆண்டுகாலமாக இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இந்த ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது.
172 ரன்களுக்கு ஆல் அவுட்:
இந்த நிலையில், ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் தொடங்கியுள்ளது. உலகின் அதிவேக மைதானங்களில் ஒன்றான பெர்த் மைதானத்தில் இன்று முதல் டெஸ்ட் தொடங்கியது. இந்திய நேரப்படி காலையில் தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.
ஸ்டார்க் பந்துவீச்சில் இங்கிலாந்து தடுமாறியது. கிராவ்லி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் டக் அவுட்டாக ஒல்லி போப்பில் 46 ரன்கள், ஹாரி ப்ரூக்கின் 52 ரன்கள், ஜேமி ஸ்மித்தின் 33 ரன்கள் உதவியுடன் 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவின் பலமாக திகழும் ஸ்டார்க் மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து பதிலடி:
இதையடுத்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து பந்துவீச்சில் பதிலடி தந்தது. ஆட்டத்தை தொடங்கிய ஜேக் வெதரால்ட் டக் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய லபுஷேனே 9 ரன்னில் ஆர்ச்சல் பந்தில் போல்டானார். மைதானம் பந்துவீச்சிற்கு நன்றாக ஒத்துழைத்தது.
அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் களத்தில் நிற்க முயற்சிக்க அவர் 49 பந்துகளில் 17 ரன்களுக்கு அவுட்டானார். உஸ்மான் கவாஜாவும் 2 ரன்னில் அவுட்டாக 31 ரன்களுக்க 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

அடுத்து வந்த ஹெட் - கேமரூன் கிரீன் ஜோடி பொறுப்புடன் ஆடினார். ஆனாலும் ஆர்ச்சர், பரைடன் கர்ஸ் வேகத்தில் மிரட்டினர். அவர்கள் களத்தில் நிலைத்து நிற்கத் தொடங்கிய நேரத்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வந்தார். அவர் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை நிலைகுலைய வைத்தார்.
தடுமாறும் ஆஸ்திரேலியா:
பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 35 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டாக, அவர் ஆட்டமிழந்த சிறிது நிமிடங்களில் கேமரூன் கிரீன் 24 ரன்களில் அவுட்டானார். 83 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 100 ரன்களை கடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடினார். அவரும் ஸ்டார்க்கும் ஏதுவான பந்துகளில் ரன்கள் எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்தது. இந்த ஜோடியை பென் ஸ்டோக்ஸ் பிரித்தார். அவரது பந்தில் ஸ்டார்க் 12 ரன்னில் அவுட்டாக சில நிமிடங்களில் அலெக்ஸ் கேரி 26 ரன்களுக்கு அவுட்டானார். ஆட்டம் முடிய சில நிமிடங்களில் போலந்த் டக் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்டோக்ஸ் மிரட்டல்:
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ஓவர்களில் 1 மெய்டன் ஓவர் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆர்ச்சர், ப்ரைடன் கர்ஸ் 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
49 ரன்கள் இங்கிலாந்தை விட பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியாவின் கைவசம் 1 விக்கெட் மட்டுமே உள்ளது. இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், மைதானம் பந்துவீச்சிற்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக இருப்பதால் இந்த ஆட்டத்திற்கு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது இன்னிங்சில் நல்ல ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவிற்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க இங்கிலாந்து முனைப்பு காட்டும். பொதுவாக இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி என்றாலே வீரர்கள் இடையே வார்த்தை மோதல் அனல் பறக்கும். இந்த போட்டியிலும் ப்ரைடன் கர்ஸ் லபுஷேனே இடையே வார்த்தை மோதல் வெடித்தது.




















