Shakib Al Hasan Record: இதுவரை 3 பேர் மட்டும்தான்... ஒருநாள் போட்டியில் புதிய வரலாறு படைத்த ஷகிப் அல் ஹசன்..!
வங்கதேச அணியை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், கிரிக்கெட் உலகில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
வங்கதேச அணியை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அயர்லாந்து உடனான ஒருநாள் போட்டி:
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 93 ரன்களையும், ஹிரிதாய் 92 ரன்களையும் சேர்த்தனர்.
ஷகிப் அல் ஹசன் சாதனை:
இந்த போட்டியில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்தார். அதன்படி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து வீரர் ஜெயசூர்யா மற்றும் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய போது, 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை ஷகிப் அல் ஹசன் எட்டினார். இந்நிலையில், பேட்டிங்கிலும் 7000 ரன்கள் அடித்திருக்கிறார். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஷகிபப் அல் ஹசன் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 8146 ரன்கள் உடன் தமிம் இக்பால் முதல் இடத்தில் உள்ளார்.
மற்ற சாதனைகள்:
அதோடு, வங்கதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் டி20 யில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஷகிபப் அல் ஹசன் வகித்து வருகிறார். இதே போன்று டி20 கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் மற்றும் 50 கேட்சிகளை பிடித்த இரண்டாவது வீரர் என்று பெருமையையும் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பிராவோ முதலிடத்தில் இருக்கிறார். அண்மையில் நடந்த இங்கிலாந்து உடனான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இடது கை சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையை பெற்றார். இந்த சாதனையை ஏற்கனவே ஜெயசூர்யா மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் படைத்துள்ளனர்.
அயர்லாந்து படுதோல்வி:
இதனிடையே, 339 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி, 30.5 ஓவரில் 155 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 183 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக வங்கதேசத்தில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதேநேரம், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை வங்கதேச அணி முழுமையாக கைப்பற்றியது.