CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்தத்தில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி 6வது தங்கம் வென்ற நவீன்
காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நவீன் பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் இவர் இங்கிலாந்து நாட்டின் சார்லியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் சிறப்பாக செயல்பட்டார். இந்தப் போட்டியில் நவீன் 11-1 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் நவீன் பாகிஸ்தான் வீரர் முகமது ஷாரிஃப் தஹிரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுக்க முயற்சி செய்தனர். அதில் இந்திய வீரர் நவீன் பாகிஸ்தான் வீரர் செய்த தவறை பயன்படுத்தி புள்ளிகளை எடுத்தார். முதல் சுற்றின் முடிவில் இந்திய வீரர் நவீன் 2-0 என முன்னிலை வகித்தார். அதன்பின்னர் இந்திய வீரர் நவீன் அசத்தலாக செயல்பட்டு புள்ளிகளை எடுத்தார். இறுதியில் 9-0 என்ற கணக்கில் இந்திய வீரர் நவீன் போட்டியை வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு மல்யுதத்தில் 6வது தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார்.
முன்னதாக மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகாத் பங்கேற்றார். இவர் முதல் போட்டியில் கனடா வீராங்கனை சமந்தா ஸ்டீவாட்டை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் வினேஷ் போகாத் 5-0 என்ற கணக்கில் வென்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் நைஜீரிய வீராங்கனை அடோகுரோயே எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகாத் 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.
மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இலங்கையின் மதுராவல்கேவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் வினேஷ் போகாத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியை 4-0 என்ற கணக்கில் இருந்த போது பின் செய்து வென்றார். இதன்மூலம் 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வினேஷ் போகாத் முதலிடம் பிடித்தார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதன்மூலம் நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு மல்யுத்தத்தில் 5வது தங்கத்தை வினேஷ் போகாத் வென்று அசத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்