(Source: ECI/ABP News/ABP Majha)
CWG 2022 Table Tennis: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் குழு பிரிவில் மீண்டும் தங்கம் வென்று அசத்திய இந்திய அணி..!
காமன்வெல்த் ஆடவர் குழு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் குழு பிரிவில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நைஜீரியா அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது. இந்தியாவின் சத்யன் -ஹர்மித் தேசாய் இணை யோங்-பாங்க் இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 13-11 ,11-7,11-4 என்ற கணக்கில் வென்றது.
அதன்பின்னர் ஆடவர் ஒற்றையர் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவின் சரத் கமல் சிங்கப்பூர் வீரர் கிளாரன்ஸ் சூவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை சிங்கப்பூர் வீரர் கிளாரன்ஸ் 11-7 என்ற கணக்கில் வென்றார். இந்தியாவின் அனுபவம் வாய்ந்த வீரர் சரத் கமல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது கேமை சரத் கமல் 14-12 என்ற கணக்கில் வென்றார். மூன்றாவது கேமை கிளாரன்ஸ் 11-3 என எளிதாக வென்றார். நான்காவது கேமையும் கிளாரன்ஸ் 11-9 என வென்றார். அத்துடன் 11-7,12-14,11-3,11-9 என்ற கணக்கில் கிளாரன்ஸ் போட்டியை வென்றார். இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தனர்.
அடுத்து நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சத்யன் சிங்கப்பூரின் பாங்கை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் முதல் கேமை சத்யன் 12-10 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது கேமை சிங்கப்பூர் வீரர் பாங் 11-7 என்ற கணக்கில் வென்றார். மூன்றாவது கேமில் அசத்தலாக விளையாடிய சத்யன் 11-7 என வென்று அசத்தினார். நான்காவது கேமையும் சத்யன் 11-4 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் போட்டியை 12-10,7-11,11-7,11-4 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் இந்திய அணி 2- 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து அடுத்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் சிங்கப்பூர் வீரர் கிளாரன்ஸ் சூவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் முதல் கேமை ஹர்மித் தேசாய் 11-8 என்ற கணக்கில் வென்றார். இதைத் தொடர்ந்து இரண்டாவது கேமிலும் சிறப்பாக விளையாடிய ஹர்மித் தேசாய் 11-5 என்ற கணக்கில் வென்றார். மூன்றாவது கேமிலும் ஹர்மித் தேசாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் அவர் 11-8,11-5,11-6 என்ற கணக்கில் கிளாரன்ஸை வீழ்த்தினார். அத்துடன் இந்திய அணி சிங்கப்பூர் அணியை 3- 1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்கவைத்து கொண்டது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு இது 5வது தங்கப்பதக்கமாகும். முன்னதாக இந்திய லான் பவுல்ஸ் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்