CWG 2022: ஒரே நாளில் இரண்டு தங்கம்... டேபிள் டென்னிஸ்,பேட்மிண்டன் வெற்றி - காமன்வெல்த் 3வது நாளின் முக்கிய முடிவுகள்
காமன்வெல்த் போட்டிகளில் 3வது நாளின் முடிவில் இந்திய அணி 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சிறப்பாக தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்திருந்தது. இந்தச் சூழலில் 3வது நாளான நேற்று இந்திய அணிக்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் 3வது நாளில் இந்தியாவிற்கு கிடைத்த பதக்கங்கள் மற்றும் வெற்றிகள் என்னென்ன?
இரண்டு தங்கம்:
நேற்றைய போட்டியில் ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லால்ரின்னுங்கா தங்கப்பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆடவர் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அச்சிந்தா ஷெயுலி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதனால் ஒரே நாளில் இந்திய அணிக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன.
அரையிறுதியில் டேபிள் டென்னிஸ் அணி:
ஆடவர் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி காலிறுதிச் சுற்றில் பங்களாதேஷ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியை இந்திய அணி 3-0 என வென்றது. இதைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நைஜீரியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
அரையிறுதியில் பேட்மிண்டன் கலப்பு அணி:
பேட்மிண்டன் கலப்பு குழு பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதிப் போட்டியில் இந்திஅ அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணி இன்று நடைபெறும் அரையிறுதியில் சிங்கப்பூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
காலிறுதியில் சவுரவ், ஜோஷ்னா:
ஸ்குவாஷ் பிரிவு போட்டிகளில் மகளிர் ஒற்றையர் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 11-8 9-11 11-4 11-6 என்ற கணக்கில் நியூசிலாந்தின் வாட்ஸை வீழ்த்தினார். அத்துடன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷால் 11-6 11-2 11-6 என்ற கணக்கில் கனடாவின் டேவிட்டை வீழ்த்தினார். அவரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இறுதியில் ஸ்ரீஹரி நட்ராஜ்:
50 மீட்டர் பேக்ஸ்டோர்க் பிரிவு நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீஹரி நட்ராஜ் பங்கேற்றார். இவர் 50 மீட்டர் தூரத்தை 25.38 விநாடிகளில் கடந்தார். இதன்மூலம் 8வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றார்.
மகளிர் கிரிக்கெட்:
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தானா 63* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குத்துச்சண்டை:
ஆடவர் 92+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாகர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஸரீன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் ஹாக்கி:
ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி கானா அணியை 11-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது.