Watch video: மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி..!
மேளதாளங்கள் முழங்க நாட்டுப்புற கலைஞர்களுடன் ஊர்வலமாக மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி
பல்வேறு ஊர்களில் வளம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நடைபெற்றது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. இதனை அமைச்சர் மெய்யநாதன் பெற்றுக்கொண்டார்.
அப்போது மேளதாளங்கள் முழங்கவும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ராட்சஸ பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செஸ் போர்டு வடிவில் அமைக்கப்பட்டிருந்த கேக் வெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வந்திருந்த பொதுமக்களுக்கு வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. மாநில கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கு வரை ஜோதி ஓட்டம் நடைபெறவிருக்கிறது. காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவேரா சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் ஒரு சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்