Australian Open 2022: கனவை துரத்திய வேட்கை.. 16 ஆண்டுகள்.. 63 முயற்சிகள்.. தன்னம்பிக்கையின் மறுபெயர் 'அலிஸ்’!
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி சுற்று போட்டிக்கு முதல் முறையாக அலிஸ் கார்னட் முன்னேறியுள்ளார்.
'முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்'
என்ற குறளுக்கு ஏற்ப ஒருவர் பல முறை முயற்சி செய்ததன் பயனாக இன்று தன்னுடைய கனவை நிறைவேற்றியுள்ளார். அது அவருடைய வாழ்வில் மறக்க முடியாத செல்வமாக அமைந்துள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த அலிஸ் கார்னட் ரோமேனியா நாட்டின் சிமோனா ஹாலெப்பை எதிர்த்து விளையாடினார். கொளுத்தும் வெயிலில் சுமார் 2 மணி நேரம் 33 நிமிடம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 3-6, 6-4 என்ற கணக்கில் 32 வயதான அலிஸ் கார்னட் வெற்றி பெற்றார். அத்துடன் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
No dry eyes in the house 😭😭😭
— #AusOpen (@AustralianOpen) January 24, 2022
This on-court interview between @alizecornet and Jelena Dokic is everything. #AusOpen · #AO2022 pic.twitter.com/F3nN0XSHNX
இதன்மூலம் தன்னுடைய 16 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் 63 முறை முயற்சி செய்து முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த சாதனை வெற்றிக்கு பிறகு அவர் பேட்டியளித்தார். அதில், “உங்களுடைய கனவிற்காக மீண்டும் முயற்சி செய்ய காலம் தடையாக இருக்காது. நான் முதல் கிராண்ட்ஸ்லாம் காலிறுதி சுற்றுக்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் என்னுடைய கனவு நினைவாகியுள்ளது. சிமோனா ஹாலெப் நன்றாக விளையாடினார். இந்த வெப்பத்தில் நாங்கள் இருவரும் தடுமாறினோம். எனினும் நான் இறுதி வரை தாக்குப்பிடித்து போட்டியில் வெற்றி பெற்றேன் ” எனக் கூறினார்.
Alize Cornet advances to her 1st Slam QF in her 63rd appearance, a new record.
— WTA Insider (@WTA_insider) January 24, 2022
She has defeated 2 in-form former No.1s (Muguruza, Halep) and a reigning RG semifinalist (Zidansek from a a set and 1-4 down) to do it, all in what may be her final season.
Chapeau. #AusOpen pic.twitter.com/8QjfGsec8G
32 வயதான அலிஸ் கார்னட் 2005ஆம் ஆண்டு பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் முறையாக களமிறங்கினார். அப்போது முதல் அதிகபட்சமாக 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நான்காவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். அதன்பின்னர் தற்போது தான் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
மேலும் படிக்க: ஒரே அணியில் 12 பேருக்கு கொரோனா... இந்திய மகளிர் கால்பந்து அணியை துரத்தும் சோகம்..