AUS vs ENG Test: ரொம்ப மோசம் டா.. 2 நாட்களில் முடிந்த பாக்ஸிங் டே டெஸ்ட்.. ஆஸி.,யை வென்ற இங்கிலாந்து!
Boxing Day Test Match: தனது முதல் இன்னிங்ஸை ஆட இங்கிலாந்து வந்தது. அந்த அணியும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல ஆஸ்திரேலியாவுக்கு டஃப் கொடுத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மோசம் என்னவென்றால் இப்போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் டெஸ்ட் தொடர் பாக்ஸிங் டே ஆட்டம் என அழைக்கப்படும். இந்த நாளில் ஏதேனும் இரு அணிகள் இடையே போட்டியானது நடத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஆஷஸ் தொடர் நடப்பதால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியாக அமைந்தது.
முதல் இன்னிங்ஸ் நிலவரம்
மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களம் கண்ட ஆஸ்திரேலியா வீரர்கள் பெரிதாக நிலைத்து நிற்காமலும், பெரிய அளவிலான ஸ்கோர் அடிக்காமலும் அடுத்தடுத்து அவுட்டாயினர். அதிகப்பட்சமாக மைக்கேல் நாசர் 35 ரன்களும், உஸ்மான் கவாஜா 29 ரன்களும், அலெக்ஸ் கேரி 20 ரன்களும் எடுத்தனர். முன்னணி வீரர்கள் பலரும் ஒற்றை இலக்கில் அவுட்டாயினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் பந்து வீசிய ஜோஷ் டாங்க் அதிகப்பசமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆட இங்கிலாந்து வந்தது. அந்த அணியும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல ஆஸ்திரேலியாவுக்கு டஃப் கொடுத்தது. ஹேரி புரூக் 48 ரன்களும், கஸ் அட்கின்சன் 28 ரன்களும் எடுக்க இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மைக்கேல் நாசர் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார் 2 விக்கெட்டுகளும், ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
2வது இன்னிங்ஸ் நிலவரம்
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை 40 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மிக கவனமுடன் விளையாடியது. 32.2 ஓவர்கள் ஆடிய அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்யாசத்தில் வென்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு இந்த தொடரில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்குகிறது.





















