India-New Zealand WTC final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - 4000 பார்வையாளர்களுக்கு அனுமதி!
2019 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளை காண ரசிகர்கள் மைதானம் உள்ளே அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்...
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண 4000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஹாம்ப்ஷயர் கவுண்டி கிளப் தலைவர் ராட் பிரான்ஸ்குருவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்தொற்றின் தாக்கம் இங்கிலாந்தில் குறைந்து வரும் நிலையில், இறுதி போட்டி நடைபெற உள்ள ஏஜியஸ் பவுல் மைதானத்தில் தற்போது நடைபெறும் கவுண்டி போட்டிகளை காண 1500 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... மேற்கொண்டு பல கவுண்டி போட்டிகளை காணவும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். 2019 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளை காண ரசிகர்கள் மைதானம் உள்ளே அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து ஹாம்ப்ஷயர் கவுண்டி கிளப் தலைவர் பிரான்ஸ்குருவ் "இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இனைந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் இறுதி போட்டிக்கு 4000 பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இதில் 50 சதவீதம் டிக்கெட்டுகளை ஐசிசி தனது ஸ்பான்சர்களுக்காக எடுத்துக்கொள்ளும், மீதமுள்ள இரண்டாயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு இரண்டு, மூன்று முறை விண்ணப்பித்து வருவதாகவும், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் நிறைந்த போட்டியாக இருப்பதால், இறுதி போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியா நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.