Khelo India: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு 7வது தங்கம்; ஸ்குவாஷ் வீராங்கனை பூஜா ஆர்த்தி அசத்தல்
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் இருந்தே கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி சென்னை, கோவை மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றுவருகின்றது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கானை பூஜா ஆர்த்தி மகாராஸ்ட்ரா வீராங்கனையை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு தனது 7வது தங்கத்தினை வென்றுள்ளது.
கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழநாடு தங்கப்பதங்களை தொடர்ந்து குவித்து வருகின்றது. இதில் இன்று ஒரே நாளில் மட்டும் 6 தங்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தமிழ்நாடு வீரர் சரண் 48.42 விநாடிகளில் பந்தைய தூரத்தை எட்டி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு தற்போது தனது கணக்கில் மேலும் ஒரு தங்கத்தினை வென்று தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கின்றது. தற்போது தமிழ்நாடு அணி 7 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இடத்தில் மகாராஸ்ட்ரா அணி உள்ளது. மாகாராஸ்ட்ரா மாநிலம் 4 தங்கம் , 6 சில்வர் மற்றும் 11 வெண்கலம் வென்றுள்ளது.
தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்னு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.