விரல்களும் 6.. ஜெர்சி எண்ணும் 6.. தேசிய ஜுனியர் ஹாக்கி போட்டியில் அசத்திய சிபின்
கேரள மாநிலத்தில் ஹாக்கி விளையாட்டுக்கு விடுதி கிடையாது, குடும்ப கஷ்டத்தை சமாளிக்க வேலைக்கு சென்றாக வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் சுமார் 29 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், கேரளா ஹாக்கி அணியை சேர்ந்த 6 எண் வீரர் அனைவரது கவனத்தை கவர்ந்தார். கோல் அடிக்கும் போது டைவ் அடித்து அவர் எண்ணான 6 என்பதை கூறி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். போட்டியின் இறுதியில் கேரளா ஹாக்கி அணியை சேர்ந்த 6 எண்ணுக்கு சொந்தக்காரரான சிபின் பாலகிருஷ்ணன் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு இரண்டு கைகளிலும் தலா 3 விரல்களே உள்ளன. இடது கையில் மோதிர விரல், நடு விரல், கட்டை விரல், வலது கையில் மோதிர விரலும், நடு விரலும் இணைந்தும், கட்டை விரலும் உள்ளன. ஆனால், சாதாரண விரல்கள் உள்ளவர்களை போல் சுலபமாக விளையாடி அசத்தினார்.
கேரளா ஸ்போர்ட்ஸ் கவுன்சில் அணியிலும், ஜூனியர் ஹாக்கி அணியிலும் முன்கள விளையாட்டு வீரராக உள்ளார் சிபின். இதுவரை சப்-ஜூனியர் ஹாக்கியில் 2 தேசிய போட்டிகளிலும், டெல்லி பெஸ்ட் ஸ்கூல் தேசிய போட்டியிலும், தற்போது 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி என 4 தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளார். கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக விளங்கும் கேரளாவில் இருந்து வந்துள்ள ஹாக்கி விளையாட்டி வீரர்களின் காலணிகள் கூட மோசமாக இருந்தது. அவற்றை அவர்கள் தைத்து தான் அணிந்திருந்தனர். இதில் சிபின் கண்களில் சில எதிர்பார்ப்புகள் தெரியவே செய்தன.
இது குறித்து சிபின் பாலகிருஷ்ணன் கூறுகையில் வயது 18 ஆகிறது. பள்ளியில் நான் கால்பந்தும், ஹாக்கியும் விளையாடினேன். அப்போது உடற்கல்வி ஆசிரியர் எபி, ஏதாவது விளையாட்டில் கவனம் செலுத்து என அறிவுரை கூறி, ஹாக்கி விளையாட தொடங்கினேன். எனக்கு விரல்கள் குறைவு என்பதால் முதலில் ஹாக்கி மட்டை பிடிக்க கஷ்டம் இருந்தது. ஆனால் எனக்குள் இருந்த நம்பிக்கை ஹாக்கி விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இது என்னை விளையாட்டு விடுதிக்கு தேர்ந்தெடுக்க உதவியது. அங்கு 3 ஆண்டுகள் இருந்து ஹாக்கி பயற்சியுடன் படித்தேன். தற்போது ஆலுவாவில் உள்ள வி.சி. கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் மேனேஸ்மென்ட் இளங்கலை முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வருகிறேன்.
கோழிக்கோட்டில் கால்பந்து விளையாட்டு தான் பிரபலம். ஹாக்கி விளையாட அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் இது ஏழைகளின் விளையாட்டாகத்தான் பார்க்கப்படுகிறது. கேரளாவில் நடைபெறும் அனைத்து ஹாக்கி போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளேன். கல்லூரிக்கு வந்தபின்னர் தான் புதுச்சேரி, சென்னை, லெவன்ஸ் ஆகியவற்றில் விளையாடுகிறேன். என்னுடையே லட்சியம் ஹாக்கியில் நல்ல வீரராக தேர்வாக வேண்டும். ஹாக்கி விளையாடித்தான் வேலை வாங்க வேண்டும்.
எனக்கு கைகளில் விரல்கள் இல்லை என்பது குறையாக இல்லை. யாரும் குறையாகவும் பார்க்கவில்லை. என்னுடைய விளையாட்டை பார்த்து சிலர் உதவி செய்துள்ளனர். கல்லூரிக்கு பின்னரான ஹாக்கி விளையாட்டு என்பது கனவாகி விடும். அதற்குள் ஜூனியர் அல்லது சீனியர் பயிற்சி முகாமுக்கு தேர்வாக வேண்டும். அதன் மூலம் இந்திய அணியில் இணைந்து ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எனக்கு இந்தாண்டுடன் ஜூனியருக்கான வயது பூர்த்தியாகிவிடும். அடுத்த ஆண்டு என்றால் சீனியர் ஹாக்கி போட்டிகளில்தான் பங்கேற்க முடியும், என்று கூறினார்.
தமிழகத்தை போன்று கேரளத்தில் ஹாக்கி விளையாட்டு விடுதி கிடையாது. 20 வயதில் கல்லூரி படிப்பை முடித்தவுடன், அவர்களுக்கு ஹாக்கி விளையாட்டு என்பது கனவாகி விடும். ஏனென்றால், குடும்ப கஷ்டத்தை சமாளிக்க வேலைக்கு சென்றாக வேண்டும். வேலையும் பெரியதாக ஒன்றும் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலை, பெயின்டிங், ஹோட்டல்கள் என கூலி வேலைக்கு தான் செல்கின்றனர். ஹாக்கியில் ஆர்வமுள்ளவர்கள்தான் காசு செலவழித்து மாணவர்களை விளையாட வைக்கின்றனர் என்கிறார் இந்த இளம் வீரர்.