Vinayagar Chaturthi 2023: சேலத்தில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு - பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார்
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 2,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. மூன்றாம் நாளான இன்று சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சேலம் மாநகர் பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி சேலம் எல்லை பிடாரியம்மன் திருக்கோயிலில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலத்தினை இந்து முன்னணி அமைப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சேலம் எல்லை பிடாரியம்மன் கோயில் அருகே தொடங்கி வின்சென்ட், அஸ்தம்பட்டி, சின்னத்திருப்பதி வழியாக கன்னங்குறிச்சி ஏரி சென்றடையும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர எல்லைக்குட்பட்டவர்கள் மூக்கனேரியில் விநாயகர் சிலைகளைக் கரைத்திடலாம். மேலும், சேலம் ஊரகப் பகுதிகளான சங்ககிரி உட்கோட்டம், தேவூர் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் கல்வடங்கம் பகுதியிலும், பூலாம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் சந்தைபேட்டை, பில்லுக்குறிச்சி, கோம்பைக்காடு ஆகிய பகுதிகளிலும், ஆத்தூர் உட்கோட்டம், தம்மம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி ஏரியிலும், ஆத்தூர் ஊரகம் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் முட்டல் ஏரி மற்றும் ஒட்டம்பாறை ஏரியிலும் சிலைகளைக் கரைத்திடலாம்.
மேட்டூர் உட்கோட்டம், மேட்டூர் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் காவேரி பாலம் பகுதியிலும், கொளத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் சென்றாய பெருமாள் கோயில் பகுதியிலும், கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் திப்பம்பட்டியிலும், மேச்சேரி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் கூனாண்டியூர், கீரைக்காரனூரிலும், ஓமலூர் உட்கோட்டம். தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் டேனீஷ்பேட்டை ஏரியிலும், வாழப்பாடி உட்கோட்டம், வாழப்பாடி காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் ஆணைமடுவு அணை பகுதியிலும், கருமந்துறை காவல் நிலையத்திற்குட்பட்டவர்கள் மணியார்குண்டம் ஏரியிலும் சிலைகளைக் கரைத்திட நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தவிர பிற இடங்களில் சிலைகளை கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவிலில் மூன்று நாட்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகின்றது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தெருக்களிலும் வீதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் சேலம் மாவட்டம் பொதுமக்கள் கரைத்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்கள் இல்லாமல் தவிர்க்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளதால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.