படிப்பில் தடுமாற்றமா..? - இந்த கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க... அப்புறம் பாருங்க..!
படிப்பில் தடுமாற்றம் உள்ள பிள்ளைகளை அழைத்து வந்து வழிபாடு செய்தால் படிப்பில் முன்னேற்றம் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி பகுதியில் அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவனுக்கு ஒப்பிலாமணீஸ்வரர் என்ற பெயரும் உண்டு, 7 நிலை ராஜகோபுரம் கொண்டது. தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள மலையின் மீது இந்த கோயில் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. தல விநாயகர் வலம்புரி விநாயகராக சுயம்புவாக இருக்கிறார். பிரகாரத்தில் உள்ள முத்துக்குமாரர் ஒரு முகமும் ஆறு கரங்களுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.
வித்தியாசமான கோலத்தில் ஸ்ரீதேவி
சப்தமாதாக்கள் சன்னதியில் விநாயகர், ஐயப்பன் ஆகியோரும் உள்ளனர். மகாவிஷ்ணு இங்கு வழிபட்டதை குறிக்கும் விதமாக பிரகாரத்தில் கையில் பிரயோகச் சக்கரத்துடன் மகாவிஷ்ணுவும், ஸ்ரீ தேவியும் இருக்கின்றனர். ஸ்ரீ தேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.
படிப்பில் முன்னேற்றம்
திருஞானசம்பந்தர் இங்கு வந்து அறையணிநாதரை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல விரும்பினார். ஆனால், ஏதோ சில காரணங்களால் அவரால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை. எனவே, இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார்.
சம்பந்தர் பிரதிஷ்டை செய்த சிவன் சன்னதி அறையணிநாதர். அம்பாள் சன்னதிகளுக்கு இடையே தனியே இருக்கிறது. சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்பது விசேஷம். இக்கோயிலில் படிப்பில் தடுமாற்றம் உள்ள பிள்ளைகளை அழைத்து வந்து வழிபாடு செய்தால் படிப்பில் முன்னேற்றம் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம்
இங்கு நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரு சனீஸ்வரருக்கும் எள் படைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள காலபைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும்.
அம்பாள் பொன்னழகி தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். திருவண்ணாமலை சென்ற ரமண மகரிஷி வழியில் இக்கோயிலுக்கு வந்து அதுல்யநாதேஸ்வரரை வணங்கி விட்டு அதன் பின்னரே திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். மகாபலி மன்னனிடம் 3 அடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மகாவிஷ்ணு, உயிரைக் கொன்ற தோஷம் நீங்க சிவனை வேண்டினார். அவர் பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப்பெறும் என்றார்.
சாபவிமோசனம்
அதன்படி பல தலங்களுக்கும் சென்ற மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது சிவன் அவருக்கு காட்சி தந்து விமோசனம் தந்தார் மகாவிஷ்ணு தாயாரை பிரிந்து தனியே வந்ததால், ஸ்ரீதேவியும் மகாவிஷ்ணுவைத் தேடி இத்தலத்திற்கு வந்தாள் இவ்விருவருக்கும் சிவன் காட்சி தந்தருளினார். பிற்காலத்தில் நீலகண்டர் எனும் முனிவர் ஒருவர் தான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் வேண்டி சிவ தல யாத்திரை சென்றார்.
அவர் திருவண்ணாமலை செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி சிறு குன்றாக இருந்த இத்தலத்தில் அமர்ந்தார். அப்போது தூரத்தில் இருந்த திருவண்ணாமலையை தரிசித்த முனிவருக்கு, இந்த தலத்திலேயே சிவனை வழிபட வேண்டும் என ஆசை வந்தது. எனவே, சிவனை எண்ணி இவ்விடத்தில் தவம் செய்து வழிபட்டார். அவருக்காக மனம் இரங்கிய சிவன், அம்பாளுடன் காட்சி தந்து அவருக்கு சாபவிமோசனம் கொடுத்தருளினார்.
சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அறையணிநாதர்
நீலகண்ட முனிவர் சிவனிடம் தனக்கு இவ்விடத்தில் அருளியது போல இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டுமென வேண்டினார். அவருக்காக சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அறையணிநாதர் என்ற பெயர் பெற்றார். அறை என்றால் பாறை என்றும், அணி என்றால் அழகு என்றும் பொருள் பாறை மீது அழகாக அமைந்திருப்பவர் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்துள்ளது.
"பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும் அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம்"
இங்கு சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோயிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பந்தர் பதிகம் பாடி கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும் அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் உள்ளது.
உங்கள் ஊரில் உள்ள பிரசித்திபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் பற்றி வெளியிட 8508008569 வாட்ஸ் அப் செய்யலாம்....