விஜயதசமி நாளில் கோயிலுக்கு வந்து க்யூட்டாக "அ" போட்ட குட்டீஸ்...காஞ்சியில் க்யூட் சம்பவம்..!
Kanchipuram : நெல்லில் "அ" எழுத வைத்து தங்கள் குழந்தைகளுக்கு முதல் கல்வியை ஆர்வத்துடன் துவக்கி வைத்து வருகின்றனர்.
விஜயதசமி விழாவை ஒட்டி காஞ்சிபுரம் ஹயக்ரீவர் கோயிலில் நெல்லில் உயிர் எழுத்தான அ எழுதி தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை துவக்கிய பெற்றோர்கள்
நவராத்திரி பண்டிகை
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழும் நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவது பிரதானமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 15 -ம் தேதி முதல் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9 நாட்களிலும் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜை நடைபெறும். புரட்டாசி மாதம் அம்மாவாசைக்கு பிறகு பூர்வ பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே இந்த நவராத்திரி திருவிழாவாகும். நவராத்திரி முடிந்து வரும் தசமி திதியை விஜயதசமி என்று கொண்டாடி பூஜையை இந்துகள் நிறைவு செய்கின்றனர். பொதுவாகவே, பிரதமை அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைப்பது வழக்கம்.
விஜயதசமி நாளில்
இந்நிலையில் எல்லா திதிகளிலும் இறையம்சம் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரி வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தங்கள் படிப்புக்கு தேவையான விஷயங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்துத் தளத்திலும் தொழில் செய்பவர்கள் அயூத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
விஜயதசமி நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை, கல்வி மற்றும் யோகத்துக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம்.
கல்வி கடவுளான ஹயக்ரீவர்
இந்நிலையில் இந்த நாளில் கல்வி கற்கவும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் சிறந்தது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை வழிபடுவதும் ஆராதிப்பதும் அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி, சுமங்கலிகளையும், பெண்களையும் வரவேற்று, மங்கலப் பொருட்கள் வழங்குவதும் இல்லத்தில் ஐஸ்வர்யம் பொங்கச் செய்யும், தீர்க்கசுமங்கலியாக வாழச் செய்யும் என்பதும் நம்பிக்கை. கல்வி கடவுளான ஹயக்ரீவர் முன்பு விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு முதல் கல்வியை தொடங்கி வைப்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.